கலங்கடிக்கும் ‘டீன் ஏஜ்’ காதல் ஆராய்ச்சி


கலங்கடிக்கும் ‘டீன் ஏஜ்’ காதல் ஆராய்ச்சி
x
தினத்தந்தி 25 March 2018 6:35 AM GMT (Updated: 25 March 2018 6:35 AM GMT)

இளம் மனதின் எண்ணங்கள் என்னவாக இருக்கின்றன என்பதை கண்டறிவதற்கான வாழ்வியல் ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ளம் மனதின் எண்ணங்கள் என்னவாக இருக்கின்றன என்பதை கண்டறிவதற்கான வாழ்வியல் ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் பங்குபெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவ- மாணவிகள். 12 முதல் 18 வயதுக்கு உள்பட்டவர்கள். அவர்களிடம் வாழ்க்கையை பற்றிய பல்வேறு விஷயங்களை கேள்விகளாக கேட்டுவிட்டு, காதல் உணர்வுகள் பற்றியும் கொஞ்சம் கேட்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் மிகவும் கவனிக்கத் தகுந்தது. பெற்றோர் இதனை கருத்தில்கொள்ளவேண்டும் என்பதற்காக இங்கே தருகிறோம்.

உங்களது காதலைப் பற்றி பெற்றோருக்கு தெரியுமா?

காதல் இருப்பதாக ஒத்துக்கொண்டவர்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதில் 42 சதவீதம் பேர் பெற்றோருக்கு தெரியும் என்றும், 58 சதவீதம் பேர் பெற்றோருக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆனால் 95 சதவீதம் பெற்றோர்கள் இப்போதும், தங்கள் மகனோ, மகளோ இந்த பருவத்தில் காதலில் ஈடுபடமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் அளவுக்கு அதிகமாக தங்கள் பிள்ளைகள் செல்போனை பயன்படுத்தும்போதுகூட, அப்படி செல்போனில் யாரிடம் பேசுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள் என்று கண்காணிப்பதில்லை. ஆணும், பெண்ணும் இப்போது விரைவாக உடல் வளர்ச்சி பெற்றாலும், ஆண்களைவிட பெண்கள் அதிக உடல் வளர்ச்சி பெறுகிறார்கள். உடல் வளர்ச்சியால் அவர்கள் விரைவாக மன வளர்ச்சியும் அடைகிறார்கள் என்பதை பெற்றோரும் சமூகமும் புரிந்துகொள்ளவேண்டும். மகளின் மனவளர்ச்சியை அங்கீகரிக்கத் தெரிந்த பெற்றோரால் மட்டுமே அவளது செயல்பாடுகளில் எது சரி? எது தவறு? என்பதை உணர்ந்துகொள்ள முடியும். சரியாக வழிகாட்டவும் முடியும்.

(சர்வே முடிவு ‘பெற்றோர் தங்களது பிள்ளைகளின் காதலை சற்று கண்காணிக்கவேண்டும்’ என்று கூறுகிறது)

நட்பாக பழகியவரைத்தான் காதலுக்குரியவராக மாற்றிக்கொள்கிறீர்களா?

இந்த கேள்விக்கு 57 சதவீதம் பேர் ஆம் என்றும், 43 சதவீதம் பேர் இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

நட்பு இவர்கள் வாழ்க்கையில் காதலாக மாறுவது மிக விரைவாக நடக்கிறது. ஒரே பள்ளியில் அல்லது ஒரே வகுப்பில் உள்ளவர்களிடம்தான் காதல் உருவாகிறது என்று சொல்வதற்கில்லை. உலகின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் இந்த வயதில் காதல்வசப்படுகிறார்கள். பெரும்பாலானவர்கள் வலைத்தளம் மூலமே காதல்கொள்கிறார்கள். அவர்களது காதல் பேச்சு பெருமளவு எல்லைமீறியதாகத்தான் இருக்கிறது. அந்த எல்லைமீறல் அவர்களது எதிர்கால வாழ்க்கையையும் பாதித்துவிடக்கூடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

செல்போனில் எந்த ஆப் உங்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது?

82 சதவீதம் பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள். 5 சதவீதம் பேர் மெசஞ்சரும், 2 சதவீதம் பேர் ஸ்கைபையும் பயன்படுத்துகிறார்கள். 11 சதவீதம் பேர் மேற்கண்டவைகளில் எதையும் பயன்படுத்துவதில்லை என்கிறார்கள். சவுகரியமும், பாதுகாப்பும் வாட்ஸ்அப்பில் அதிகம் இருப்பதாக டீன்ஏஜ் பருவத்தினர் சொல்கிறார்கள். ஆனால் காதல் அறிமுகம் பெரும்பாலும் பேஸ்புக்கில்தான் நடக்கிறது. நட்பு.. அன்பு.. கல்வி.. பொழுதுபோக்கு.. என்று ஆரம்பிக்கும் தகவல்தொடர்பு அப்படி இப்படி போய் இறுதியில் காதலில் முடிகிறது.

ப்ராஜெக்ட் செய்கிறேன்.. ஸ்டடி மெட்டீரியல் தேடுகிறேன் என்று மணிக்கணக்கில் இரவு பகல் பாராமல் கம்ப்யூட்டர் முன்பு பிள்ளைகள் அமர்ந்திருந்தால் அதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். பேஸ்புக்கில் அறிமுகமாகி, மெசஞ்சரில் தகவல்களை பரிமாறி, வாட்ஸ்அப்பிற்கு வருவது இப்போது காதலின் பாதையாக இருக்கிறது.

நீங்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உங்கள் பெற்றோரிடம் வாக்குவாதம் ஏற்படுமா?

ஆமாம் என்று 82 சதவீதம் பேரும், இல்லை என்று 18 சதவீதம் பேரும் சர்வேயில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

செல்போனை பிள்ளைகளிடமிருந்து பிரிக்க முடியாது என்பது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. தங்கள் பிள்ளைகளிடமிருந்து அதை பிரிக்கவேண்டும் என்ற எண்ணமும் பெரும்பாலான பெற்றோர்களுக்கு இல்லை. பக்கத்து வீட்டு பெண் பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருக்கிறாள் தனது பெண் ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்கும் நிலையில்தான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள். அதனால் செல்போன் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால் பிள்ளைகள் மீது சந்தேகமோ, படிப்பில் பின்னடைவோ, வேறு விதமான பிரச்சினைகளோ உருவாகும்போது, பிள்ளைகளின் செல்போன் பயன்பாட்டிற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அப்போது பெற்றோர்- பிள்ளைகள் தரப்பினரிடையே மோதல் உருவாகிறது. பெரும்பாலான பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல்தான் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள்.

வீட்டில் நிலவும் மோசமான சூழ்நிலை உங்களை காதலிக்க தூண்டியதா?

ஆமாம் என்று 22 சதவீதம் பேரும், இல்லை என்று 78 சதவீதம் பேரும் பதிலளித்திருக்கிறார்கள்.

பல குடும்பங்களில் கணவன்- மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அவர்கள் ஆளுக்கொரு பக்கமாக இரு துருவங்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர் களது பிள்ளைகள் நிம்மதியின்றி தவிக்கிறார்கள். எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்றும் அஞ்சுகிறார்கள். அப்போது வீட்டிற்கு வெளியே இருந்து பாசமாக யாராவது பழகினால் அவரிடம் நெருங்கத் துணிகிறார்கள். அது இனக் கவர்ச்சியான காதலாகிவிடுகிறது. இன்னொரு உண்மை என்னவென்றால், பாசமான தம்பதிகளால் வளர்க்கப்படும் பிள்ளைகளும் காதல் வசப்படத்தான் செய்கிறார்கள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்றால் பெற்றோர், தங்கள் பிள்ளைகளிடம் அன்பு பாராட்டவேண்டும். நண்பர்களைப் போன்று அவர்களிடம் பழகவேண்டும். பிள்ளைகள் மனதில் இருப்பதை பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசும் மன நிலையை உருவாக்கவேண்டும்.

இளம் வயதிலே காதலிப்பது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சரி என்று 42 சதவீதம் பேரும், சரியல்ல என்று 58 சதவீதம் பேரும் சொல்கிறார்கள். ஆனால் சரியல்ல என்று சொல்கிறவர்கள், தவறென்று கருதிய பின்பும் காதலிக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய டீன்ஏஜினரிடம் காதல் நல்லது என்ற கருத்து பரவிக்கொண்டிருக்கிறது. டெலிவிஷன் தொடர்களோ, சினிமாக்களோ அதற்கு காரணமாக இருக்கின்றன. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், காதல் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள். காதல் இன்றல்ல முன்பும் இருக்கத்தான் செய்தது. ஆனால் முந்தைய காதல் எல்லைமீறாததாகவும், சமூக அக்கறைகொண்டதாகவும் இருந்தது. ஆனால் இப்போது புரிந்துகொள்ளத் தெரியாத, லட்சியங்களும் இல்லாத காதல்களாகத்தான் இருக்கின்றன.

டீன்ஏஜ் காதல் கல்வியை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அது நிச்சயம் கல்வியை பாதிக்கும் என்று 62 சதவீதம் பேரும், பாதிக்காது என்று 30 சதவீதம் பேரும், 8 சதவீதம் பேர் அது பற்றி சரியாகத் தெரியாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

காதல், கல்வியை பாதிக்காது என்று நினைத்துக்கொண்டுதான் பலரும் காதலிக்கிறார்கள். ஆனால் உண்மையை உணரும்போது அவர்களது கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டுவிடுகிறது. வீட்டிலோ, பள்ளியிலோ பெயரும் கெட்டுப்போய்விடுகிறது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல், கல்வியில் தோல்வியடைந்த பின்பு காதலித்தது தப்பு என புரிந்துகொள்கிறார்கள். ஆனால் அந்த நிலையில் அவர்கள் வாழ்க்கையிலும் தோல்வியடைந்துவிடுகிறார்கள்.

இந்த சர்வே தகவல் பெற்றோரிடமும், பிள்ளைகளிடமும் விழிப்புணர்வு ஊட்டுவதாக இருக்கிறது.

Next Story