காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்கள் கொதித்து எழுவார்கள் பழ.நெடுமாறன் பேச்சு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்கள் கொதித்து எழுவார்கள் பழ.நெடுமாறன் பேச்சு
x
தினத்தந்தி 26 March 2018 4:15 AM IST (Updated: 25 March 2018 10:53 PM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்கள் கொதித்து எழுவார்கள் என்று பழ.நெடுமாறன் கூறினார்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்சார்பில் நடந்த உண்ணாவிரதப்போராட்டத்தை அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தொடங்கி வைத்து பேசியதாவது:–

மத்திய அரசு தமிழக மக்களின் நலனை அழிக்க பார்க்கிறது.

அதை தடுத்து நிறுத்தக்கூடிய பொறுப்பு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு. இது 4 மாநில பிரச்சினை. 3 மாநிலங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புதல் தெரிவித்துள்ளன. இதை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டி.டி.வி.தினகரனின் பார்வை காவிரி பக்கம் திரும்பி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத மோடி அதை காலில் போட்டு மிதிக்கலாமா? காவிரி நமது வாழ்வாதார பிரச்சினை. கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. அ.தி.மு.க. எம்.பி.க்கள் மோசடி போராட்டம் நடத்துகிறார்கள். மோடியின் மக்கள் விரோத ஆட்சியால் கேரளா, தமிழகம், ஆந்திரா ஒன்று பட்டுள்ளது. அதை சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. காவிரி உரிமையை மீட்போம். தமிழக மக்களைகாப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடைபெறும் போராட்டத்துக்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்’’என்றார்.


உண்ணாவிரதபோராட்டத்தை முடித்து வைத்து உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பேசியதாவது:–

40 ஆண்டுகாலமாக காவிரி பிரச்சினைக்காக போராடி களைத்து விட்டோம். உச்சநீதிமன்றம் தற்போது தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பை அமல்படுத்த கர்நாடகம் மறுக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்கு முறைக்குழு அமைத்தே தீர வேண்டும். கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மத்திய அரசு தமிழக விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் உள்ளது. இந்த போராட்டம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள். இது 7½ கோடி தமிழர்களின் பிரச்சினை. இதில் அனைவரும் ஒன்றுபட்டு நின்று போராட வேண்டும்’’என்றார்.

Next Story