குவிந்து கிடக்கும் வாகன கழிவுகளால் மாணவர்கள் அவதி


குவிந்து கிடக்கும் வாகன கழிவுகளால் மாணவர்கள் அவதி
x
தினத்தந்தி 25 March 2018 10:30 PM GMT (Updated: 25 March 2018 6:45 PM GMT)

பெரம்பூர் முரசொலிமாறன் பூங்கா அருகே குவிந்து கிடக்கும் வாகன கழிவுகளால் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர். இதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பூர்,

பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே முரசொலி மாறன் பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவின் அருகே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது.

மைதானத்திற்கு எதிரே உள்ள தனியார் பள்ளி மாணவர்களும், பந்தர் கார்டன் தெருவில் உள்ள அரசு பள்ளி மாணவர்களும் இந்த விளையாட்டு மைதானத்தில் விளையாடுவது வழக்கம். மேலும் இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடம் உள்ளது.

பெரம்பூரில் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததாக மாநகராட்சி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 6 ஆட்டோ, ஒரு கார் மற்றும் கனரக வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களை கடந்த 2016-ம் ஆண்டு மாநகராட்சி அதிகாரிகள் கொண்டு வந்து போட்டனர்.

அதன்பிறகு அந்த வாகனங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் துருப் பிடித்தும், உடைந்த பாகங்கள் சிதறி குப்பைகளாய் குவிந்து கிடக்கின்றன. பூங்காவிற்கு விளையாட வரும் மாணவர்கள் அவதி அடைந்தனர்.

இந்த வாகனங்களில் இருந்து மது அருந்துவது, கஞ்சா புகைப்பது, ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது என பல்வேறு சமூக விரோத செயல்களில் மர்மநபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வாகனங்களில் உள்ள உதிரி பாகங்களை திருடி விற்கும் செயலிலும் மர்மகும்பல் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே மாணவர்கள் விளையாடுவதற்கு இடைஞ்சலாக இருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், அங்கு தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குப்பைகளாக காட்சி அளிக்கும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story