திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. முதலாம் மண்டல பாசனத்திற்கு 2-வது சுற்று தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. முதலாம் மண்டல பாசனத்திற்கு 2-வது சுற்று தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 March 2018 3:30 AM IST (Updated: 26 March 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. முதலாம் மண்டல பாசனத்துக்கு 2-வது சுற்று தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தளி,

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திஅணை அமைந்துள்ளது. அதன்படி பி.ஏ.பி. பாசன திட்டத்தின் மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. மேலும் திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக்கூடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பி.ஏ.பி. தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து அவற்றின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வந்தது. இதைதொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் இறுதியில் பி.ஏ.பி. முதலாம் மண்டல பாசனத்துக்காக முதல் சுற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீரை கொண்டு விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பலவகை பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 39.79 ஆகும். அணைக்கு வினாடிக்கு காண்டூர் கால்வாய் மூலம் 242 கன அடியும், பாலற்றின் மூலம் 1 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அணையில் இருந்து குடிநீருக்காக 31 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் திருமூர்த்தி அணைக்கு கூடுதலாக தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.இதனால் குறித்த காலத்தில் 2-வது சுற்றுக்கு தண்ணீர் வழங்குவதற்கு முடியவில்லை. இதன்காரணமாக பி.ஏ.பி. பாசன திட்டத்தை அடிப்படையாக கொண்டுள்ள விளைநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே கருகிவரும் பயிர்களை காப்பாற்ற திருமூர்த்தி அணையில் இருந்து 2-வது சுற்று தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story