அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டிடம்


அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டிடம்
x
தினத்தந்தி 25 March 2018 10:15 PM GMT (Updated: 25 March 2018 8:55 PM GMT)

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்ட இடவசதி இல்லாததால் ஏற்கனவே உள்ள பழைய கட்டிடங்களை இடித்து விட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கத்திற்கு அருகில் உள்ள பழைய நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இடத்தை கேட்டு அரசு வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையில் அந்த இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் அந்த இடம் நகராட்சி இடம் இல்லை. அரசு புறம்போக்கு நிலம் என்பதை கண்டுபிடித் தனர்.

பின்னர் சுமார் 2½ ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தை வருவாய் துறை அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்தது. இதனால் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்டும் திட்டத்தை அதிகாரிகள் கைவிட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொடுக்கப்பட்டு உள்ள இடத்தில் 8 தளங்களுடன் கூடிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக 5 தளங்கள் கட்ட ரூ.6 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் (கட்டு மானம்) கூறியதாவது:-

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு 5 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக 3 இடங்களில் மண் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் முடிவுகள் நல்லவிதமாக வந்து உள்ளது. கட்டிடம் கட்டுவதற்கு தேவையான சிமெண்டு உள்பட தளவாட பொருட்கள் கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

அடுத்த வாரத்தில் பணிகள் தொடங்கப்படும். இதற்காக அங்கிருந்த ஒரு பழைய கட்டிடம் மட்டும் இடிக்கப்பட்டு உள்ளது. மற்ற கட்டிடங்கள் மற்றும் மரத்தை அகற்ற வேண்டிய தேவையில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.மருத்துவ துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஒருங்கிணைந்த புறநோயாளிகள் பகுதி, 48 படுக்கைகளுடன் ஆண், பெண் நோயாளிகளுக்கு தனி, தனி வார்டு, மகப்பேறு பிரிவு, பிறந்த குழந்தைகளுக்கு நவீன அறுவை சிகிச்சை அரங்கம், மின் தூக்கி மற்றும் சாய்தளத்துடன் கட்டிடம் கட்டப்படுகிறது. முதற்கட்டமாக 5 தளங்கள் கொண்ட கட்டிடம் ரூ.6 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்படுகிறது. பின்னர் மேலும் 3 தளங்கள் ரூ.3 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

தரை தளத்தில் மருந்தகம், உயிர் காற்று கலன் துறை, வாகன நிறுத்தும் இடம், உயிர்நுண் மருத்துவ கழிவு அறை, 108 மருத்துவ அவசரகால வாகனம் நிறுத்தும் அறை, முதல் தளத்தில் வெளிநோயாளிகளுக்கு சீட்டு கொடுக்கும் இடம், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, எக்ஸ்-ரே,

2-ம் தளத்தில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, ஆய்வகம், மருத்துவ அலுவலர் அறை, இருதய பரிசோதனை அறை, 3-ம் தளம் 24 படுக்கைகள் கொண்ட பெண்கள் வார்டு, 24 படுக்கைகள் கொண்ட ஆண்கள் வார்டு, 4-ம் தளத்தில் மகப்பேறு மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு நவீன அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் ஒவ்வொரு தளத்திலும் ஆண்கள், பெண்கள், ஊனமுற்றோருக்கு தனி, தனி கழிப்பறைகள் மற்றும் செவிலியர் அறை கட்டப்பட உள்ளது. பணிகளை 15 மாதங்களுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அங்கு உள்ள வாகன நிறுத்தும் இடத்தை அகற்றுவது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார். 

Next Story