அ.தி.மு.க.வில் டி.டி.வி.தினகரன் அணி இணையும் உ.தனியரசு எம்.எல்.ஏ. பேட்டி


அ.தி.மு.க.வில் டி.டி.வி.தினகரன் அணி இணையும் உ.தனியரசு எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 26 March 2018 4:30 AM IST (Updated: 26 March 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் டி.டி.வி.தினகரன் அணி இணையும் என்று உ.தனியரசு எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

கரூர்,

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது சட்டவிரோதமானது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு இந்திய அரசியல் சாசனத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும், இறையாண்மைக்கும் எதிரானது. சட்டத்திற்கு எதிரான மத்திய அரசை கலைத்து விடலாம்.

ராம ராஜ்ஜியத்தை முன்னிறுத்தி மன்னர் ஆட்சி முறையை நினைவுபடுத்தும் விதமாக ரத யாத்திரையை மேற்கொள்வது மத சார்பின்மைக்கு எதிரானது. அதனால் தான் ரத யாத்திரையை எதிர்க்கிறோம்.

தமிழகத்தில் நடிகர்கள் இனிமேல் நாடாள முடியாது. ரஜினிகாந்த் தொடங்கிய மக்கள் மன்றத்தில் குறுகிய காலத்திலே திண்டுக்கல் மாவட்டத்தில் நிர்வாகிகள் நியமனத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது அரசியல் கடுமையானது என்பதை ரஜினிகாந்த் உணர்ந்திருப்பார். புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசன் முதல் சுற்று வந்து விட்டார். இனி 2, 3-வது சுற்று அவர் வரப்போவதில்லை. வடமாநில கட்சிக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்த ரஜினி, எம்.ஜி.ஆர். ஆட்சி தருவதாக பச்சை பொய் சொல்கிறார். மக்கள் அவரை ஏற்க மாட்டார்கள்.

அ.தி.மு.க.வுடன் தற்போது எங்கள் கூட்டணி தொடர்கிறது. கூட்டுறவு சங்க தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்போம். அடுத்து வருகிற தேர்தலில் கூட்டணி நிலைப்பாடு பற்றி அப்போது தான் அறிவிக்கப்படும்.

அ.தி.மு.க.வில் அணிகள் ஒன்றாக இருப்பது தான் பலம். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைந்தனர். அதுபோல எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் டி.டி.வி. தினகரன் அணி இணையும். அதற்கான வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி அப்பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின் கரூரில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்பட பல்வேறு இடங்களில் பேரவை கொடியை அவர் ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அருள்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story