பந்தலூர் அருகே கேளை ஆடு இறைச்சி வைத்திருந்த தொழிலாளி கைது


பந்தலூர் அருகே கேளை ஆடு இறைச்சி வைத்திருந்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 25 March 2018 10:00 PM GMT (Updated: 25 March 2018 9:08 PM GMT)

பந்தலூர் அருகே கேளை ஆடு இறைச்சி வைத்திருந்த தொழிலாளியை வனத்துறையினர் கைது செய்தனர்.

பந்தலூர்,

பந்தலூர் அருகே கிளன்ராக் பகுதியில் ஒரு வீட்டில் கேளை ஆடு இறைச்சி சமைப்பதாக தேவாலா வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வனச்சரகர் சரவணன் தலைமையில் வன காப்பாளர்கள் லூயிஷ், மில்டன் பிரபு உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று கண்காணித்தனர்.

பின்னர் சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டுக்குள் வனத்துறையினர் நுழைந்தனர். அப்போது அங்கு கேளை ஆடு இறைச்சி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையொட்டி வீட்டில் இருந்த தொழிலாளி கொச்சுமோன் என்ற பாலச்சந்தர் (வயது 57) என்பவரை வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் தேவாலா வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் கிளன்ராக் வனப்பகுதியில் செந்நாய்கள் கடித்து இறந்து கிடந்த கேளை ஆட்டின் உடலை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையொட்டி பாலச்சந்தர் மீது தேவாலா வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த 2 கிலோ கேளை ஆடு இறைச்சியை பறிமுதல் செய்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்களை வேட்டையாடுதல் மற்றும் அதன் இறைச்சியை சமைத்தல் சட்டப்படி குற்றமாகும். எனவே வனத்தில் இறந்து கிடக்கும் வனவிலங்குகளின் இறைச்சியை யாரும் எடுக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story