வங்கியில் ரூ.95 லட்சம் மோசடி ஊழியர் உள்பட 2 பேர் கைது


வங்கியில் ரூ.95 லட்சம் மோசடி ஊழியர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 March 2018 3:45 AM IST (Updated: 27 March 2018 12:03 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில், வங்கி ஒன்றில் தரம் குறைந்த நகைகளை அடகு வைத்து ரூ.95 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

நெல்லை வண்ணார்பேட்டை போக்குவரத்து கழக பணிமனை அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் தங்க நகைகளை அடகு வைத்த சிலர் நீண்ட காலமாக அந்த நகைகளை திருப்பாமல் இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த வங்கி அதிகாரிகள் அடகு வைத்த நகைகளை பரிசோதனை செய்தனர். இதில் அந்த நகைகள் தரம் குறைவான நகைகள் என்பதும், அதற்கு அதிகமாக கடன் கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது.இதுகுறித்து வங்கி மேலாளர் செல்வராஜ் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வங்கியில் பணியாற்றி வந்த நகை மதிப்பீட்டாளர் செண்பகராஜ் தனக்கு வேண்டியர்களிடம் தரம் குறைந்த நகைகளை அடகு வைக்க கூறி, அதிக கடன் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 30 முதல் 35 பேர் இதுபோன்று தரம் குறைவான நகைகளை வங்கியில் அடகு வைத்ததும், இதில் மொத்தம் ரூ.95 லட்சம் வரை மோசடி நடந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார், வங்கி ஊழியரான நகை மதிப்பீட்டாளர் செண்பகராஜை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த சுப்பிரமணியன் என்பவரும் கைது செய்யப்பட்டார். தரம் குறைந்த நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ.95 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story