கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு: பள்ளிக்கூட மாணவர் உள்பட 2 பேர் கைது


கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு: பள்ளிக்கூட மாணவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 March 2018 4:00 AM IST (Updated: 27 March 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில், கொத்தனாரை அரிவாளால் வெட்டிய வழக்கில் பள்ளிக்கூட மாணவர் உள்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆறுமுகநேரி,

காயல்பட்டினம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் சந்துரு (வயது 21). பிளம்பர். இவருடைய தம்பி, காயல்பட்டினத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் சந்துருவின் தம்பி அப்பகுதி வழியாக நடந்து சென்றார். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் செல்போன்களில் விளையாடியவாறு சிரித்தனர்.

இதனை பார்த்த சந்துருவின் தம்பி, தன்னைத்தான் சிறுவர்கள் கேலி செய்ததாக கருதி, அவர்களிடம் தகராறு செய்தார். உடனே அங்கு வந்த சந்துருவும் அவருடன் சேர்ந்து அந்த சிறுவர்களை தாக்கினார். இதில் ஒரு சிறுவன் காயம் அடைந்தான்.

இதை அறிந்த அந்த சிறுவனின் தந்தையான கொத்தனார் இசக்கிமுத்து (46) ஆத்திரமடைந்தார். இதுகுறித்து தட்டிக்கேட்க அவர், அன்று இரவில் மூர்த்தியின் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அங்கு இருந்த சந்துரு, அவரை பிடித்து கொண்டார். அவருடைய தம்பி அரிவாளால் இசக்கிமுத்துவின் கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த இசக்கிமுத்து ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தவுடன் 2பேரும் தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் இசக்கிமுத்துவை மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்துரு, அவருடைய தம்பி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

சந்துருவின் தம்பி நேற்று காலையில் பிளஸ்-2 வணிகவியல் தேர்வு எழுத காயல்பட்டினம் தனியார் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். அந்த பள்ளக்கூட வாசலில் வைத்து அவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சந்துரு, அவருடைய தாயார் ராமலட்சுமி ஆகிய 2 பேரும் தங்களை சிலர் தாக்கியதாக அளித்த புகாரின்பேரில், 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story