தூத்துக்குடியில் குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்


தூத்துக்குடியில் குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 March 2018 4:00 AM IST (Updated: 27 March 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும், என கலெக்டர் அலுவலகத்தில் ம.தி. மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார்.

அப்போது, மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘எரிவாயு இணைப்புகளை ஒரு வினியோகஸ்தரிடம் இருந்து மற்றொரு வினியோகஸ்தருக்கு மாற்றம் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு முன் அறிவிப்பு செய்து, அவர்களின் விருப்பத்தை அறிந்து மாற்றம் செய்ய வேண்டும்.

தமிழக அரசு சட்டப்படி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் ஆட்சி மொழிக்கு முதலிடம் கொடுக்கும் வகையில் தமிழில் பெயர் பலகைகள் வைத்திட வேண்டும். அதற்கு மாவட்ட கலெக்டர் தினசரி பத்திரிகை மூலம் செய்தி வெளியிட வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் சார்பில் மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், வீரபாண்டி சரவணன், வீரபாண்டி கோபி, மகாராஜன் மற்றும் ம.தி.மு.க.வினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் தரையில் முட்டி போட்டு, தங்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், ‘மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குழாய்கள் உடைந்து கடந்த 2 மாதங்களாக பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணாகி வருகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி குடிநீர் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்க இருக்கும் மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘ஸ்ரீவைகுண்டம் தாலுகா சாயர்புரம் 12-வது வார்டுக்கு உட்பட்ட கக்கன்நகர், மாசிலாமணிபுரம் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட இந்து அருந்ததியர் சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாயர்புரம் எல்லை ஓரமாக உள்ள அரசு புறம்போக்கு இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த இடத்தை வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்தி, அந்த சுடுகாடு பகுதியில் மயான கொட்டகை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

Next Story