மதுராந்தகத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-1 மாணவர் உள்பட 3 பேர் பலி
மதுராந்தகத்தில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மொரப்பாக்கம் அருகே உள்ள அபிராமிபுரத்தைச் சேர்ந்தவர் சின்ராஜ்(வயது 30). இவர், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளி ஆவார்.
நேற்று அதிகாலை சின்ராஜ், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேலைக்கு புறப்பட்டார். அவரை மதுராந்தகம் பஸ் நிலையத்தில் சென்று விடுவதற்காக உறவினரான அதே பகுதியை சேர்ந்த சரவணன் (22) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச்சென்றனர்.
பஸ் நிலையத்தில் சின்ராஜை இறக்கி விட்டு திரும்பி வரும்போது தனியாக வரவேண்டும் என்பதற்காக தனக்கு துணையாக அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த மூர்த்தி(17) என்ற மாணவரையும் சரவணன் உடன் அழைத்துச்சென்றார்.
3 பேரும் பலி
மோட்டார் சைக்கிளை சரவணன் ஓட்டினார். அவருக்கு பின்னால் மூர்த்தி, சின்ராஜ் இருவரும் அமர்ந்து இருந்தனர். மதுராந்தகம் பைபாஸ் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென இவர்கள் 3 பேரும் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் மோட்டார் சைக்கிள் சாலையில் விழுந்து முன்பகுதி நொறுங்கியது. அதில் பயணம் செய்த சின்ராஜ், சரவணன், மூர்த்தி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.
அதிகாலை நேரம் என்பதால் இருட்டில் அவர்கள் பலியாகி கிடப்பது தெரியாமல் அவர்கள் மீது பின்னால் வந்த வாகனங்கள் ஏறிச்சென்றதால், 3 பேரின் உடல்களும் நசுங்கியது.
உறவினர்கள் சோகம்
இது குறித்து மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி, மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில், 3 பேரின் உயிரை பறித்து விட்டு நிற்காமல் சென்ற வாகனம் பதிவாகி உள்ளதா? என கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
விபத்தில் ஒரே ஊரைச்சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story