தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.20 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது

ரூ.20 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் டிரங்க் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தவமணிகண்டன் (வயது 23). மதுரவாயலில் உள்ள தனியார் அலுவலகத்தில் பணம் வசூலிப்பவராக வேலை செய்து வந்த இவர், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டுவில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை எடுத்து ஒரு பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் தவமணிகண்டனை வழிமறித்து கத்தியால் அவரது கையை கிழித்து பணப்பையை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருநெல்வேலியைச் சேர்ந்த சேகர் (32), மூர்த்தி (என்ற) தட்சணாமூர்த்தி (29), மணிகண்டபூபதி (23), வேலப்பராஜா (24) ஆகிய 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தவமணிகண்டனை வழிமறித்து பணத்தை பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம், ஒரு மோட்டார்சைக்கிள், 2 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் வேறு ஏதாவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story