கடமலைக்குண்டு அருகே அடிப்படை வசதிகள் இன்றி பரிதவிப்பு: பழங்குடியின மக்கள் கோரிக்கை மனு


கடமலைக்குண்டு அருகே அடிப்படை வசதிகள் இன்றி பரிதவிப்பு: பழங்குடியின மக்கள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 27 March 2018 3:30 AM IST (Updated: 27 March 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே உப்புத்துறை கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி பழங்குடியின மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதனால், அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் பழங்குடியின மக்கள் மனு அளித்தனர்.

தேனி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உப்புத்துறை பகுதி உள்ளது. இங்கு பழங்குடியின மக்களுக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது. இங்கு தற்போது 24 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஜெ.ஜெ. காலனி என அவர்களின் குடியிருப்புக்கு பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து மனு அளிக்க பழங்குடியின மக்கள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

எங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். தண்ணீர் தொட்டி பழுதடைந்து உள்ளது. அதை சரி செய்து கொடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் முறையாகவும், மாதந்தோறும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும் சரியாக பதிவு செய்ய வேண்டும்.

வயதானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும். ஸ்மார்ட் ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களுக்கு ஸ்மார்ட்ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story