பல்லடத்தில் இறந்த நாய்க்கு இறுதிச்சடங்கு: சங்கு ஊதி, மேளதாளத்துடன் ஊர்வலமும் நடந்தது


பல்லடத்தில் இறந்த நாய்க்கு இறுதிச்சடங்கு: சங்கு ஊதி, மேளதாளத்துடன் ஊர்வலமும் நடந்தது
x
தினத்தந்தி 26 March 2018 10:30 PM GMT (Updated: 26 March 2018 7:54 PM GMT)

பல்லடத்தில் செல்லமாக வளர்த்த நாய்க்கு கண்ணீர் மல்க இறுதிச் சடங்கு நடத்தியதோடு, நாயின் உடலை சங்கு ஊதி, மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்றார்.

பல்லடம்,

வயது முதிர்ந்த பெற்றோரை பராமரிப்பு செய்யாமல் சாலையோரம் விட்டு செல்வதும், இறந்து போன தாய், தந்தையருக்கு இறுதி சடங்கு செய்யாமல் பிணத்தை அப்படியே விட்டு செல்வதும் என மனிதநேயமில்லாத செயல் நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஒருவர் தான் செல்லமாக வளர்த்த நாய் இறந்து போக, அந்த நாய்க்கு தனது உறவினர் புடைசூழ இறுதி சடங்கு நடத்தி அடக்கம் செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தபால் அலுவலக வீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 59). தி.மு.க. பிரமுகர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய வீடு அமைந்துள்ள வீதியில் நாய் ஒன்று குட்டி போட்டுள்ளது. அதில் ஆண் நாய்க்குட்டி ஒன்றை அவர் ஆசையோடு எடுத்து வந்து தனது வீட்டில் வளர்த்துள்ளார். அந்த நாய்க்குட்டிக்கு ‘சீச்சு’ என்று பெயரிட்டுள்ளார். வீட்டில் உள்ளவர்களிடம் மிகவும் செல்லமாக வளர்ந்து வந்த நாய்க்குட்டி அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. வீட்டு உறுப்பினர் ஒருவர் போல நாயை வளர்த்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சீச்சுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் நாயை, திருப்பூர் வீரபாண்டியில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தார். ரூ.2,500 செலவு செய்து நாயை கவனித்து வந்துள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி சீச்சு இறந்தது.

இந்த தகவல் நேற்று காலை ஜெயபிரகாசுக்கு கிடைத்தது. இதைக்கேட்டதும் அவர் மட்டுமில்லாமல் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மருத்துவமனையில் இருந்து சீச்சுவின் உடலை வீட்டுக்கு எடுத்த வந்த அவர், மனிதன் இறந்தால் எப்படி இறுதி சடங்கு நடக்குமோ அதுபோல் தனது செல்ல நாய்க்கும் நடத்தினார்.

நாயை குளிப்பாட்டி புதுதுணியால் போர்த்தி, அதற்கு பொட்டு வைத்து, மாலை அணிவித்து, வீட்டு முன்புறம் உள்ள அறையில் நாயின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. நாயின் அருகே விளக்கேற்றியும், ஊதுபத்தியும் வைத்திருந்தனர். உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் வந்து நாய்க்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

வீட்டில் உள்ள பெண்கள் வட்டமாக கூடி நின்று ஒப்பாரி வைத்து அழுதார்கள். பின்னர் மாலையில் நாய் சீச்சுவின் உடலை காரின் பின் இருக்கையில் வைத்து இறுதி ஊர்வலமாக கொண்டு சென்றனர். காருக்கு முன்னால் சங்கு ஊதி, மேள, தாளம் முழங்க பட்டாசு வெடித்து சென்றார்கள். பின்னர் பச்சாபாளையம் மயானத்தில் நாய் சீச்சுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஜெயபிரகாஷ் கண்ணீர் மல்க கூறும்போது, “எனது வீட்டுக்கு அருகே கண் கூட முழிக்காத நிலையில் இந்த நாய்க்குட்டியை எடுத்து வந்து வளர்த்தேன். அனைவரிடமும் மிகவும் அன்பாக வளர்ந்து வந்தது. சீச்சுவின் மரணம் என்னை மட்டுமில்லாமல் எனது குடும்பத்தையே உலுக்கி விட்டது. அதனால் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தேன். நாய்க்கு 16 நாள் காரியம் போன்றவற்றையும் நடத்த உள்ளேன்“ என்றார். 

Next Story