கூடலூரில் காங்கிரசார் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி செல்ல அனுமதி மறுப்பு


கூடலூரில் காங்கிரசார் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி செல்ல அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 26 March 2018 10:00 PM GMT (Updated: 26 March 2018 7:54 PM GMT)

கூடலூரில் காங்கிரசார் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் உள்ள பிரிவு-17 நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி அடுத்த மாதம் 9-ந் தேதி கூடலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கேரள முன்னாள் முதல்- மந்திரி உம்மன்சாண்டி ஆகியோர் கலந்து கொண்டு பேச உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுக்கூட்டத்துக்கு பொதுமக்களை திரட்டுவதற்கு காங்கிரசார் ஆயத்தமாகி வருகின்றனர். இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் வாகன பிரசாரம் மட்டும் செய்து கொள்ளலாம். மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என போலீசார் மறுத்து விட்டனர்.

இதை தொடர்ந்து நேற்று திட்டமிட்டபடி மோட்டார் சைக்கிள் பேரணி நடத்துவதற்கு கூடலூரில் ஏராளமான காங்கிரசார் குவிந்தனர். ஆனால் போலீசார் அனுமதி அளிக்காததால் விழிப்புணர்வு பேரணி தொடங்குவதில் குழப்ப நிலை காணப்பட்டது. இதனால் கட்சி கொடிகளை கட்டியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் காங்கிரசார் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனிடையே திட்டமிட்டபடி பேரணி நடத்த காங்கிரஸ் கட்சியினர் தயாராகினர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காங்கிரஸ் கட்சியினர் வாகன பிரசாரம் மட்டும் செய்வதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து கூடலூரில் இருந்து தேவர்சோலை, பந்தலூர், பிதிர்காடு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் பிரிந்து சென்று பிரசாரம் செய்தனர்.

அவர்களுடன் இளைஞர் காங்கிரசார் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக ஒவ்வொரு பகுதிக்கும் சென்றனர். பெரும்பாலானவர்கள் போக்குவரத்து விதிமுறைகளின்படி தலையில் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். 

Next Story