மதுரை விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்


மதுரை விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 26 March 2018 10:30 PM GMT (Updated: 26 March 2018 7:54 PM GMT)

மதுரை விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது.

மதுரை,

இலங்கையில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் தங்கம் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் அதிகாரிகளுக்கு சந்தேகம் இருந்ததை தொடர்ந்து, இலங்கையில் இருந்து வந்த அந்த விமானத்தில் ஏறி அதிகாரிகள் சோதனை செய்தனர். பல மணி நேரம் சோதனை செய்தபின்பும் தங்கம் எதுவும் சிக்கவில்லை. அப்போது, விமானத்தில் இருந்து விமான நிலையத்தை இணைக்கும் நடைமேடையில் 5 தங்க கட்டிகள் கிடந்தன. அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். அந்த 5 தங்க கட்டிகளும் 994 கிராம் எடை கொண்டவை ஆகும். அதன் மதிப்பு ரூ.31 லட்சம் ஆகும்.

இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், விமானத்தில் இருந்து விமான நிலையத்தை இணைக்கும் நடைமேடை (ஏரோ பிரிட்ஜ்) அருகே கிடந்த 5 தங்க கட்டிகளை யார் கொண்டு வந்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

சில தினங்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கார்பன் பேப்பரில் வைத்து கடத்தியவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த 1½ மாதத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தங்க கடத்தல் சம்பவங்களை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Next Story