அரசு பஸ்சின் டயர் வெடித்தது டிரைவரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு


அரசு பஸ்சின் டயர் வெடித்தது டிரைவரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 27 March 2018 4:00 AM IST (Updated: 27 March 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

சாலியமங்கலம் அருகே அரசு பஸ்சின் டயர் வெடித்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.

சாலியமங்கலம்,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருச்சிக்கு நேற்று அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை ஆரோக்கியராஜ் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக கணேசன் இருந்தார். அந்த பஸ் மாலை 3 மணி அளவில் தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகே கோவிலூர் அண்ணாநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது பஸ்சின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் பயங்கர சத்தம் கேட்டதால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சல் போட்டனர். இந்த நிலையில் தாறுமாறாக ஓடிய பஸ்சை டிரைவர் ஆரோக்கியராஜ் சாமர்த்தியமாக இயக்கி சாலை ஓரம் நிறுத்தினார். டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

மாற்ற முடியவில்லை

பஸ்சில் மாற்று டயர் இல்லாததால் வெடித்த டயரை உடனடியாக மாற்றி பஸ்சை தொடர்ந்து இயக்க முடியவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். பின்னர் அந்த வழியாக வந்த வேறு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். 2 மணி நேரத்துக்கு பின்னர் மாற்று டயர் வரவழைக்கப்பட்டு பஸ் எடுத்து செல்லப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த இடம் பஸ் நிறுத்தம் இல்லாத பகுதி ஆகும். இதனால் பயணிகள் தங்கள் உடைமைகளுடன் சாலையிலேயே காத்திருக்க வேண்டி இருந்தது. இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவதியை ஏற்படுத்தியது.

மோசமான சாலை

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

தஞ்சை-நாகை நெடுஞ்சாலையில் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சாலை மிக மோசமாக உள்ளது. அதிக பள்ளங்கள் இருப்பதால் அச்சத்துடன் பயணிக்க வேண்டி உள்ளது. மேலும் பஸ்களை சரிவர பராமரிக்காமல் இயக்குகிறார்கள். கட்டணம் மட்டும் கூடுதலாக வசூலித்துவிட்டு தரமற்ற பஸ்களை இயக்குவது கவலை அளிக்கிறது. நீண்ட தூர பயணத்துக்கு தரமான பஸ்களை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பயணிகள் கூறினர். 

Next Story