அதிகாரிகள் வராததால் செயலாளர் உள்பட 4 பேரை கூட்டுறவு கடன் சங்கத்திற்குள் வைத்து பூட்டிய உறுப்பினர்கள்


அதிகாரிகள் வராததால் செயலாளர் உள்பட 4 பேரை கூட்டுறவு கடன் சங்கத்திற்குள் வைத்து பூட்டிய உறுப்பினர்கள்
x
தினத்தந்தி 27 March 2018 4:15 AM IST (Updated: 27 March 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

தொட்டியம் அருகே வேட்பு மனு கொடுக்க அதிகாரிகள் வராததால் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளர் உள்பட 4 பேரை உள்ளே வைத்து உறுப்பினர்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொட்டியம்,

கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. அதேபோல திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரத்தில் 4 ஆயிரத்து 79 உறுப்பினர்களை கொண்ட வரதராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்தலுக்கு நேற்று வேட்பு மனுக்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காலை 11 மணி வரை வேட்பு மனுக்கள் வழங்க அதிகாரிகள் வராததால், அங்கு கூடியிருந்த உறுப்பினர்கள் அலுவலகத்திற்குள் பணியில் இருந்த சங்க செயலாளர் சிங்காரம், பணியாளர்கள் தங்கவேல், மணிவேல், ஆராயி ஆகிய 4 பேரையும் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அரசு டவுன் பஸ்சை விடுவித்தார். பின்னர் உறுப்பினர்கள் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அலுவலகத்தின் உள்ளே இருந்த செயலாளர் உள்பட 4 பணியாளர்களையும் மாலை 5 மணிக்கு வெளியே செல்ல அனுமதித்தனர். அவர்கள் சென்ற பின்னர் உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு வரை தொடர்ந்தது.

முற்றுகை

இதேபோல் தோளூர்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் 3 ஆயிரத்து 960 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு வேட்பு மனுக்கள் வழங்க அதிகாரிகள் வராததால் அங்கு கூடியிருந்த உறுப்பினர்கள் சங்க அலுவலகத்தை மாலை வரை முற்றுகையிட்டனர். நாகையநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் வேட்பு மனுக்கள் வழங்க அதிகாரிகள் வராததால் ஆணைக்கல்பட்டி பஸ் நிறுத்தத்தில் சங்க உறுப்பினர்களும், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அலுவலகத்தில் பணியில் இருந்த பணியாளர் ராமமூர்த்தி, உறுப்பினர்கள் மறியல் செய்ததால் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார். இதை கண்ட உறுப்பினர்கள், அந்த பூட்டின் மேல் தனியாக ஒரு பூட்டு போட்டு பூட்டினர். பின்னர் மறியலை கைவிட்டனர்.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள பிள்ளையார்கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் பால் கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் யாரும் வராததால் மணப்பாறை தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராமசாமி தலைமையில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியல் செய்ய முடிவு செய்தனர். அவர்களிடம் புத்தாநத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் முடிவை கைவிட்ட கட்சியினர் சம்பந்தப்பட்ட பால் கூட்டுறவு சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் தேர்தல் அலுவலரை கண்டுபிடித்து தரும்படி மனு கொடுத்து விட்டு சென்றனர்.

இதே போல் மணப்பாறை அருகே உள்ள கரும்புளிப்பட்டியிலும் பால் கூட்டுறவு சங்கத்தில் தேர்தல் அலுவலர் வரவில்லை என்று கூறி தி.மு.க.வினர் அந்த வழியாக வந்த பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்டுக்குட்டியிடம் மனு

முசிறி கல்லூரி சாலையில் அமைந்்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேட்பு மனு வழங்கிட அதிகாரிகள் யாரும் வராததால் முசிறி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலான தி.மு.க. வினர் கூட்டுறவு சங்கத்தின் உள்ளே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாளவந்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர். சேகரன் தலைமையில் ஆட்டுக்குட்டியிடம் வேட்பு மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் அஞ்சலம் ஊராட்சியிலும் தேர்தல் அலுவலர்கள் வராததால் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துறையூரில் முற்றுகை

துறையூர் பகுதியில் உள்ள சிங்களாந்தபுரம், கோட்டாத்தூர், புலிவலம், நாகலாபுரம், சிக்கத்தம்பூர், முத்தையம் பாளையம், துறையூர் நகரம் ஆகிய கூட்டுறவு வங்கிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் யாரும் வராததால் தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சியினர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அந்தந்த பகுதியில் உள்ள வங்கிகளை முற்றுகையிட்டனர்.

துறையூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார் தலைமையிலான தி.மு.க.வினரும், புலிவலத்தில் முசிறி ஒன்றிய தி.மு.க. செயலாளர் காட்டுகுளம் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வீராசாமி, காளிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பீரங்கி சுப்பிரமணியன் உள்பட பலர் தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிங்களாந்தபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தேர்தல் அதிகாரி வராததை கண்டித்து தி.மு.க.வினர் பசுமாட்டிடம் மனு கொடுத்தனர்.

தா.பேட்டை

தா.பேட்டையை அடுத்த பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள பூலாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலுக்காக முன்னாள் ஊராட்சி தலைவர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி மற்றும் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வேட்பு மனுவை பெறுவதற்காக வந்திருந்தனர். ஆனால், காலையில் இருந்து கூட்டுறவு சங்க தேர்தலுக்கான அலுவலர் வரவில்லை. இதையடுத்து கட்சியினர் சேருகுடியில் இருந்து பவித்திரம் செல்லும் சாலையில் பாப்பாபட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கல்லக்குடி

புள்ளம்பாடி ஒன்றியம் பு.சங்கேந்தி கிராமத்தில் கூட்டுறவு சங்க அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டு தேர்தல் நேர்மையாக நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இதேபோல் தாப்பாய் கிராமத்திலும் தி.மு.க.வினர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பே தேர்தல் அதிகாரி சாமிநாதன் கதவை மூடி பூட்டி சென்றுவிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story