டிரைவரை ஊர்க்காவல் படையினர் அழைத்து சென்றதால் பரபரப்பு


டிரைவரை ஊர்க்காவல் படையினர் அழைத்து சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 March 2018 4:30 AM IST (Updated: 27 March 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

சாலையின் நடுவே பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிய டிரைவரை ஊர்க்காவல் படையினர் அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

குடியாத்தம்,

குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் பரதராமிக்கு தனியார் டவுன் பஸ் சென்றது. இந்த பஸ் 4 முனை சந்திப்பு பகுதியில் இருந்து பலமனேர் ரோட்டிற்கு திரும்பி பயணிகளை ஏற்றியது. அப்போது அந்த ரோட்டில் லாரி ஒன்று நின்றிருந்ததால் அந்த டவுன் பஸ் சாலையின் நடுவே நின்று பயணிகளை ஏற்றி உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு நின்றிருந்த போக்குவரத்து போலீசார் பஸ் கண்டக்டரை அறிவுரைகூற கூப்பிட்டபோது பஸ் புறப்பட்டு சென்றுவிட்டது.

இதனையடுத்து போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படையினர் அந்த பஸ்சை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று முருகன் திரையரங்கம் அருகே நிறுத்தி உள்ளனர்.

பின்னர் பஸ் டிரைவர் தேவராஜை 4 முனை சந்திப்புக்கு மோட்டார் சைக்கிளில் ஊர்க் காவல்படையினர் அழைத்து வந்துள்ளனர். அங்கு போக்குவரத்து போலீசார் டிரைவருக்கு சாலையின் நடுவே பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

பஸ் டிரைவரை, போலீசார் அழைத்து சென்றதால் சுமார் 20 நிமிடம் அந்த பஸ் சாலையில் நின்றிருந்தது. இதனால் பஸ்சில் சென்ற பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். மேலும் போக்குவரத்து நெரிசலான சாலையில் பஸ் நின்று கொண்டிருந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், போக்குவரத்து போலீசார் பயணிகளை இறக்கிவிட்டு வரும்போதோ அல்லது பஸ் நிலையத்திற்கு பஸ் வந்த பின்னரோ டிரைவரை அழைத்து அறிவுரை வழங்கி இருக்கலாம் அல்லது அபராதம் விதித்திருக்கலாம். மேலும் ஊர்காவல் படையினர் வருவதற்கு பதிலாக போக்குவரத்து போலீசார் வந்திருந்தால் அங்கேயே பஸ்சை நிறுத்தி டிரைவரிடம் பேசி இருக்கலாம். இதனை செய்யாமல் டிரைவரை அழைத்து சென்றதால் நாங்கள்தான் 20 நிமிடம் பாதிக்கப்பட்டோம், என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story