ஊதியம், போனஸ் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்


ஊதியம், போனஸ் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 26 March 2018 10:45 PM GMT (Updated: 26 March 2018 9:07 PM GMT)

தனியார் ஷூ தொழிற் சாலையிடம் இருந்து ஊதியம், போனஸ் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறைதீர்வு நாள் கூட்டத்தில், கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 398 மனுக்கள் பெறப்பட்டன.

பள்ளிகொண்டாவில் இயங்கி வரும் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பள்ளிகொண்டாவில் இயங்கி வரும் தனியார் ஷூ தொழிற்சாலையில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதேபோல் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் போனஸ் மற்றும் இந்தாண்டு பொங்கல் போனஸ் ஆகியவையும் வழங்கவில்லை.

இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டதற்கு, சில நாட்களில் 4 மாத ஊதியம் மற்றும் போனஸ் தருவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை தரவில்லை. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக எங்களின் சம்பளத்தில் பிடித்த பணப்பலன்களை வரவில் வைக்கவில்லை. 4 மாதங்களாக ஊதியம் வழங்காததால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளோம். எனவே, தொழிற்சாலை நிர்வாகம் நிலுவையில் உள்ள 4 மாத சம்பளம், 2 மாத போனஸ் ஆகியவற்றை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

ஆம்பூர் தாலுகா ஆசனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தின் அருகே மிகவும் குறைவான இடத்தில் சுடுகாடு உள்ளது. அதனால் மிகவும் குறுகிய காலத்தில் ஒருவரை புதைத்த இடத்திலேயே, மற்றொருவரை புதைக்க வேண்டிய அவலநிலை காணப்படுகிறது. எனவே, வேறு பகுதியில் சுடுகாடு ஒதுக்கி தர வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் கிராமத்துக்கு தேவையான சுடுகாடு அமைத்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

காட்பாடி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், உள்ளாட்சி தேர்தலுக்காக வேலூர் மாநகராட்சி வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டது. எங்கள் பகுதி 8-வது வார்டுக்கு உட்பட்டது. வார்டு மறுசீரமைப்பால் 4-வது வார்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதியில் உள்ளவர்கள் சுமார் 3 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, எங்கள் பகுதியை பழைய மாதிரி 8-வது வார்டில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மாவட்ட செயலாளர் ஞானவேலு தலைமையில் வணிகர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், மாநகராட்சி கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ததில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுகின்றன. ஒரே அளவு, ஒரே வரிசையில் உள்ள கடைகளின் வாடகை மிகவும் வேறுபாடு காணப்படுகிறது. மேலும் கடை வாடகை பாக்கியை செலுத்தாத வியாபாரிகளை, மாநகராட்சி அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்ட குழுவினருடன் சென்று முறையற்ற முறையில் மிரட்டி வாடகை வசூல் செய்து வருகின்றனர். இதனை தடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாடகை நிர்ணயம் செய்ததில் உள்ள குளறு படிகளை களைய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பொய்கை புதூர் கிராம பொதுமக்கள் அணைக்கட்டு ஒன்றிய பா.ஜ.க. இளைஞர் அணி தலைவர் அருண்குமார் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இலவம்பாடி வழியாக அமைந்துள்ள வேலூர்-ஒடுகத்தூர் சாலையை விமான நிலைய விரிவாக்கத்துக்காக சாலை அகற்றப்பட உள்ளது என கூறப்படுகிறது. இந்த சாலையை பொய்கை புதூர், புத்தூர், மோட்டூர், மின்னல்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலையை அகற்றினால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவார்கள். எனவே, வேலூர்-ஒடுகத்தூர் சாலையை அகற்ற கலெக்டர் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கஜேந்திரன், சமூக பாதுகாப்புத்துறை துணை ஆட்சியர் பேபிஇந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story