தேர்தலை முறையாக நடத்த கோரி சாலை மறியல்


தேர்தலை முறையாக நடத்த கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 27 March 2018 3:45 AM IST (Updated: 27 March 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தில் தேர்தலை முறையாக நடத்த கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 2,7,16,23 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று தேர்தலுக்கான வேட்பு மனுவை ஏராளமானோர் அந்தந்த வாக்குச்சாவடி மைய தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தாக்கல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை திருவள்ளுவர் நகரில் உள்ள தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கத்திலும், வேட்பு மனு தாக்கல் மைய தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரகுமார் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த சங்கத்தில் 1,390 உறுப்பினர்கள் (பெண்கள் மட்டும்) உள்ளனர். இந்த சங்கத்தில் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த செல்வி என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின் போது சங்க உறுப்பினர் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். அவர்களிடம் மைய தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பு மனுக்களை வாங்கி கொண்டு ஒப்புகை சீட்டு வழங்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சங்கத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பியவாறு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மைய தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கினார். தொடர்ந்து அந்த மையத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால் வேட்பு மனுதாக்கல் முடியும் வரை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
1 More update

Next Story