வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
திருப்பூரில் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி கடன் வாங்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர்,
திருப்பூரில் உள்ள ஒரு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கி ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையில் போலி ஆவணங்களை கொடுத்து 12 நான்கு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.2 கோடி கடன் பெற்று வாகனங்கள் வாங்காமல் மோசடி செய்யப்பட் டது. இந்த வழக்கில் திருப்பூர் அங்கேரிப்பாளையத்தை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் பிரகாஷ்(வயது 34). அவருடைய நண்பர்களான தங்கதுரை(37), பார்த்தீபன்(28) ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 5 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரை சேர்ந்த ஞானசேகரன்(24) என்பவரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த விஜயகுமார்(44) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார், போலீஸ் பாதுகாப்பில் எடுத்து விசாரித்து பின்னர் மீண்டும் ஜெயிலில் அடைத்தனர். மீதம் உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story