ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும்


ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும்
x
தினத்தந்தி 27 March 2018 10:45 PM GMT (Updated: 27 March 2018 6:37 PM GMT)

படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சைக்காகவும். பரிசோதனைக்காகவும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு தாய்சேய் நலம், பொது மருத்துவம், மலேரியா, தொழுநோய், பெண்களுக்கான மார்பக பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்பட பல்வேறு சிகிச்சைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

2 மருத்துவர்கள் இருக்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதால், பரிசோதனைக்கு வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை பரிசோதித்து மருந்து வழங்க போதிய இட வசதி இல்லை.

இதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. திறக்கப்பட்டு 5 மாதங்களே ஆன இந்த சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடத்தில் கூடுதல் கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். இரவு நேரங்களில் பாதுகாப்பு கருதி நுழைவு வாயிலை மூடலாம் என்றால் அதில் உள்ள கதவுகள் மூட முடியாத நிலையில் உள்ளன.

சுகாதார நிலையத்தில் காவலர் இல்லாமல் இருப்பதால் இரவு நேரங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் பொது மக்கள் மிகுந்த அச்சத்துடன் வர வேண்டிய நிலை உள்ளது.

எனவே படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தர அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story