தலைமன்னார்-தனுஷ்கோடி இடைப்பட்ட கடல் பகுதியை 12¼ மணி நேரத்தில் நீந்தி கடந்து வந்த ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு


தலைமன்னார்-தனுஷ்கோடி இடைப்பட்ட கடல் பகுதியை 12¼ மணி நேரத்தில் நீந்தி கடந்து வந்த ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு
x
தினத்தந்தி 27 March 2018 10:15 PM GMT (Updated: 27 March 2018 6:48 PM GMT)

இலங்கை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே 12 மணி நேரம் 14 நிமிடத்தில் தமிழக ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீசாருடன் குழுவாக நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

ராமேசுவரம்,

தமிழக ரெயில்வேயின் ஏ.டி.ஜி.பி.யாக தற்போதுள்ள சைலேந்திரபாபு விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறையிலும் மிகுந்த ஆர்வமுடையவர். இவர் இலங்கை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தி வர திட்டமிட்டு நேற்று முன்தினம் தமிழக போலீசார் 15 பேர் மற்றும் மீனவர்களுடன் தலைமன்னார் புறப்பட்டு சென்றார்.

பின்னர் தலைமன்னார் ஊர்மலை பகுதியில் இருந்து நேற்று அதிகாலை நீந்தத் தொடங்கிய அவர் நேற்று மதியம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தார்.

29 கிலோ மீட்டர் தூரத்தை சரியாக 12 மணி நேரம் 14 நிமிடத்தில் கடந்து சாதனை புரிந்தார். மேலும் ஏ.டி.ஜி.பி.யுடன் தமிழக போலீசார் 9 பேரும் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீந்தி வந்தனர். தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வந்த ஏ.டி.ஜி.பி.யை கலெக்டர் நடராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா, ரெயில்வே சூப்பிரண்டு ஆனிவிஜயா, கடற்படை கமாண்டர் தினேஷ்குமார், ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், கடலோர காவல் நிலைய ஆய்வாளர் குமரவேல், ரோட்டரி சங்க துணை ஆளுனர் விஜயகுமார், தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் தலைவர்கள் நாகராஜ், முருகன் உள்பட ஏராளமான சுற்றுலா பயணிகளும், இளைஞர்களும் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இதுபற்றி ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:-

நான் கடந்த 6 வருடங்களாகவே நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். ஒரு குழுவாக தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் நீந்த திட்டமிட்டிருந்தோம். அதற்காக படகுகள் மூலமாக இலங்கை புறப்பட்டு சென்றோம்.

என்னுடன் சேர்த்து தமிழக போலீசார் 10 பேர் சேர்ந்து தலைமன்னார் ஊர்மலை பகுதியில் இருந்து அதிகாலை கடலில் நீந்தத் தொடங்கினோம். பகலில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை வந்தடைந்தோம். இலங்கை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே 29 கிலோ மீட்டர் தூரத்தை குழுவாக பாக்நீரிணையை நீந்தி வந்துள்ளது இதுவே முதல் முறையாகும். என்னுடன் நீந்தியவர்கள் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றுபவர்கள். நீச்சல் பயிற்சியில் திறமை வாய்ந்தவர்கள்.

இவர்கள் 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டதில் முக்கிய பங்காற்றினார்கள். இலங்கைக்கு புறப்பட்டு சென்றதில் இருந்தே கடல் கொந்தளிப்பாக இருந்தது. இதேபோல தலைமன்னார் பகுதியில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி பகுதியை அடையும் வரையிலும் கடல் கொந்தளிப்பாகவும், அலைகள் வேகமாகவும் இருந்ததால் நீந்துவதற்கு மிகவும் சிரமப்பட்டோம்.

இதுதவிர ஜெல்லி மீன்கள் அதிகமாக இருந்ததாலும் நீந்துவதற்கு சிரமமாக இருந்தது. இந்த சாதனை தனி மனிதராக நான் செய்யவில்லை. இந்த பாக்நீரிணையில் ஒரு குழுவாக நீந்தி வந்தது இதுவே முதல் முறையாக இருக்கும்.

தலைமன்னார் ஊர்மலை பகுதியில் இருந்து 29 கிலோ மீட்டர் தூரத்தை குழுவாக 12 மணி நேரம் 14 நிமிடத்தில் நீந்தி கடந்துள்ளோம். மற்ற கடலை விட இந்த கடலில் பாம்புகள் அதிகமாக உள்ளன. விஷத்தன்மை கொண்ட கடல் பாம்பு கடித்தால் மருந்து கிடையாது. உடனே இறந்து விடுவார்கள் எனவும் கூறப் படுகிறது. ஆனால் கடல் பாம்புகளை யாரும் பார்க்கவில்லை.

குழுவாக சேர்ந்து நீந்தி வந்ததால் வேகமாக நீந்தி வருவதற்கு ஆர்வமாக இருந்தது. தமிழகத்தில் நீச்சல் மற்றும் மற்ற விளையாட்டு போட்டிகளை பற்றி மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. வெளிநாடுகளில் உள்ளவர்கள் கடலில் நீந்தி விளையாடுவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள இளைஞர்களும், மாணவர்களும் மாரத்தான், சைக்கிள், நீச்சல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டவேண்டும். இதற்கு அனுமதி பெற்றுக்கொடுத்த தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், உள்துறை செயலாளர், பாதுகாப்புதுறை மற்றும் மத்திய-மாநில அரசுகளுக்கும், இலங்கை அரசுக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story