தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைகிறது


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைகிறது
x
தினத்தந்தி 28 March 2018 3:00 AM IST (Updated: 28 March 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைகிறது. இந்த நிலையில் அந்த ஆலையின் மருத்துவக்குழு வாகனத்தை சிறைபிடித்த கிராமமக்கள், அங்கிருந்த பேனருக்கு தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய அதன் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.குமரெட்டியாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக போராட்டங்களையும் நடத்தினர்.

அப்படி இருந்தும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார மக்கள் கடந்த 24-ந் தேதி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் தர்ணா

இதற்கிடையே, அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்ந்து நேற்று 44-வது நாளாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அரசியல் கட்சியினர் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்திலும் கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நேற்றும் சில இடங்களில் போராட்டம் நடந்தது. அதாவது தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தீவிரமடையும் போராட்டம்

இதேபோன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை கல்லூரி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாணவர் சூசை தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் திரளான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

கடந்த 24-ந் தேதி மாலையில் தூத்துக்குடியில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராட்டம் நடத்துகின்றனர். வாட்ஸ்-அப்பில் தகவல் பரப்பி போராட்டம் நடத்தினால் போலீசார் உஷாராகி, போராட்டத்தை தடுப்பார்கள் என மாணவர்கள் தெரிவித்தனர்.

பரபரப்பு

எனவே, திடீரென்று ஒன்று கூடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்தனர். அப்படித்தான் நேற்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இன்றும் மாணவர்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவக்குழு வாகனம் சிறைபிடிப்பு

இதற்கிடையே, முத்தையாபுரம் அத்திமரப்பட்டி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக மாதம் 2 முறை தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நடமாடும் மருத்துவக்குழு வாகனம் மூலம் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வந்தது. நேற்று அந்த நடமாடும் மருத்துவக்குழு வாகனம் அத்திமரப்பட்டி பகுதியில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்தது. அங்கு உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்த வாகனத்தை அந்த பகுதி கிராமமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து சிறைபிடித்தனர்.

பின்னர் ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் வருகிறது. வாழைகள் கருகி விடுகின்றன. எனவே, ஸ்டெர்லைட் மருந்து இனி எங்களுக்கு தேவை இல்லை. மருத்துவ வாகனம் திரும்பி செல்ல வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மருத்துவக்குழு வாகனம் அங்கிருந்து திரும்பி சென்றது. அந்த பகுதியில் ஸ்டெர்லைட் மருத்துவக்குழு வாகனம் வரும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பேனரை திரண்டு இருந்த பொதுமக்கள் தீவைத்து கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story