அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 3 பேர் கைது


அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 March 2018 9:45 PM GMT (Updated: 27 March 2018 7:02 PM GMT)

கண்ணங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். மேலும் அவர் களிடம் இருந்து லாரி, டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

தேவகோட்டை,

தேவகோட்டை பகுதியில் முக்கிய நீராதாரமாக உள்ள விருசுழி, தேனாறு போன்றவற்றில் அதிக அளவில் மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், மணல் திருடுவோருக்கு உடந்தையாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆறுகள் மட்டுமின்றி தற்போது கண்மாய், மணல் மேடுகள், வரத்து கால்வாய்களிலும் மணல் திருடப்பட்டு வருகிறது. தொடர்ந்து மணல் திருடப்படுவது குறித்த வந்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மணல் திருடுவோரை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி அமைக்கப்பட்ட போலீஸ் தனிப்படையினர் தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கண்ணங்குடி அருகே வடகீழ்குடியில் நேற்று முன்தினம் தேவகோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மீனாட்சிசுந்தரம், ராஜ்கமல் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக டிராக்டர் ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டபோது அதில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிராக்டரில் மணல் அள்ளிவந்த மணிமுத்து (வயது 41), கொடிகுளம் மணிகண்டன்(33) ஆகிய 2 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சிறு கானூர் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்த ராஜா(34) என்பவரை போலீசார் கைதுசெய்து, லாரியை பறிமுதல் செய்தனர். 

Related Tags :
Next Story