சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் அண்ணன், தம்பி கைது
சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டையில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காலி காய்கறி கூடைகளுடன் வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த சரக்கு வாகனத்தின் பின்புறத்தை சுற்றிலும் காலி கூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன் நடுவில் அட்டைபெட்டிகள் இருந்தன.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் காலி கூடைகளை அகற்றி விட்டு, ஒரு அட்டைபெட்டியை பிரித்து பார்த்தனர். அதில் மதுபாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த சரக்கு வாகனத்தில் மொத்தம் 31 அட்டை பெட்டிகளில் 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 1,400 மதுபாட்டில்கள் இருந்தன. இவை அனைத்தும் புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்யக் கூடியவை ஆகும்.
இதையடுத்து சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மணி மகன்கள் தமிழ்செல்வன்(வயது 29), மகேஷ்குமார்(27) ஆகியோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட மதுபாட்டில்களையும், அதனை கடத்த பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story