காரிமங்கலம் அருகே பிளாஸ்டிக் அரிசி வினியோகமா? அதிகாரிகள் நேரில் ஆய்வு


காரிமங்கலம் அருகே பிளாஸ்டிக் அரிசி வினியோகமா? அதிகாரிகள் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 27 March 2018 11:00 PM GMT (Updated: 27 March 2018 7:35 PM GMT)

காரிமங்கலம் அருகே பிளாஸ்டிக் அரிசி வினியோகிக்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினார்கள்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள ராமியம்பட்டியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதில் நிம்மாங்கரையை சேர்ந்த மாதேஷ் (வயது 30) என்பவர் கடந்த வாரம் இலவச அரிசி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் புகார் மனு அளித்தனர். இதையடுத்து நேற்று காலை பெரியாம்பட்டி வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் ஷோபனா ஆகியோர் அடங்கிய குழுவினர் நிம்மாங்கரைக்கு வந்தனர். பாதிப்புக்குள்ளானதாக கூறும் மாதேஷ் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த அரிசியின் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிருந்தாவும் ஆய்வு நடத்தினார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிளாஸ்டிக் அரிசி கலக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்த அரிசியின் மாதிரி பெறப்பட்டுள்ளது. அதை ஆய்வுக்கு அனுப்பி வைத்து உள்ளோம். ஆய்வின் முடிவு தெரிந்த பின்னர் தான் ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்பட்டுள்ளதா? என உறுதி செய்யப்படும், என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் காரிமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story