புரசைவாக்கத்தில் வியாபாரிகள் கடை அடைப்பு


புரசைவாக்கத்தில் வியாபாரிகள் கடை அடைப்பு
x
தினத்தந்தி 27 March 2018 10:00 PM GMT (Updated: 27 March 2018 7:43 PM GMT)

மெட்ரோ ரெயில் வழித்தடத்தை மாற்றியதாக கூறி வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பாதையை மாற்றும் திட்டம் இல்லை என மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

சென்னை,

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வண்ணாரப்பேட்டை-விமானநிலையம், சென்டிரல்-பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

இதில் நேரு பூங்கா-விமானநிலையம், விமானநிலையம்-சின்னமலை, ஆலந்தூர்-பரங்கிமலை இடையே சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி நடந்து வருகிறது.

அதனை தொடர்ந்து, தற்போது புதிதாக 107.55 கிலோ மீட்டர் தூரம் கொண்ட புதிய மெட்ரோ ரெயில் பாதை கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 26.58 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட பாதை மற்றும் 80.97 கிலோ மீட்டர் சுரங்கப்பாதையாகும்.

இந்த புதிய ரெயில் பாதை ரூ.80 ஆயிரம் கோடி செலவில் ஜப்பான் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற் கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி உள்ளன.

புதிய ரெயில் பாதை திட்டத்தின் கீழ், மாதவரம்-சிறுசேரி இடையே 45.81 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3-வது பாதை அமைக்கப்படுகிறது. இதில் 19.09 கிலோ மீட்டர் தூரம் உயர்த்தப்பட்ட பாதை, 26.72 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதை ஆகும்.

மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம்-கோயம்பேடு பஸ் நிலையம் இடையே 17.12 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 4-வது பாதை முற்றிலும் சுரங்கப்பாதையாக அமைகிறது.

அதே போல் மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே 44.62 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 5-வது பாதை 7.49 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட பாதையாகவும், 37.13 கிலோ மீட்டர் சுரங்கப்பாதையாகவும் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் மாதவரம்- சிறுசேரி மற்றும் மாதவரம்- சோழிங்கநல்லூர் மெட்ரோ ரெயில் பாதைகளுக்காக புரசைவாக்கம் பகுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறி, நேற்று வியாபாரிகள் புரசைவாக்கத்தில் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி புரசைவாக்கத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் கடைகளுக்கு முன்பு கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது. கடை அடைப்பு போராட்டத்தால் புரசைவாக்கம் பகுதி முற்றிலும் வெறிச்சோடி காணப்பட்டது.

இதற்கிடையே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் வணிகர்கள், கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு உள்ள வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அதன் பின்னர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது.

மாதவரம்-சிறுசேரி மெட்ரோ ரெயில் திட்டம் புரசைவாக்கம் பகுதியில் ஓட்டேரியில் இருந்து மில்லர்ஸ் சாலை, கெல்லீஸ் வழியாக செல்லும் என்று சென்னை மெட்ரோ ரெயில் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு மாறாக ஓட்டேரி, பட்டாளம், டவுட்டன், புரசைவாக்கம் டேங்க் வழியாக கெல்லீஸ் செல்லும் வகையில் வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

இதனால் டவுட்டன் முதல் மில்லர்ஸ் சாலை வரை இருபுறமும் சி' வணிகம் செய்து வரும் 5 ஆயிரம் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பழைய வழித்தடத்திலேயே ரெயில் பாதை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது,

புரசைவாக்கத்தில் ரெயில் பாதை மாற்றம் குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. தற்போது ஆரம்பநிலையிலேயே இருக்கும் இந்த திட்டத்தில் எதுவும் இறுதி செய்யவும் இல்லை, திட்டமிடவும் இல்லை. வணிகர்கள் கூறுவது போல் வழித்தடம் மாற்றப்படவில்லை. இருந்தாலும் வணிகர்கள் கூறுவதை கருத்தில் கொண்டு பொதுமக்கள், வணிகர்களை பாதிக்காத வகையில் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story