சட்ட விழிப்புணர்வு முகாம்களில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்


சட்ட விழிப்புணர்வு முகாம்களில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்
x
தினத்தந்தி 28 March 2018 4:15 AM IST (Updated: 28 March 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

சட்ட விழிப்புணர்வு முகாம்களில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, பெரம்பலூர் மாவட்ட நிர்வாக துறையின் சார்பில் நவீன முறை சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி பாலராஜமாணிக்கம் தலைமை தாங்கி வருவாய் துறை, பொது சுகாதாரத்துறை, வளர்ச்சி துறை, தொழிலாளர் நல துறைகளின் சார்பில் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

நவீன முறை சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு தாலுகா பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்கள் மற்றும் சட்ட உதவிகள் பெறுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற சட்ட விழிப்புணர்வு முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் உதவிகளையும், சட்டம் சார்ந்த பிரச்சினைகளான சிவில், கிரிமினல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம் என்று கூறினார்.

கலெக்டர்-சூப்பிரண்டு

தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி பாலராஜமாணிக்கம் முகாமில் கலந்து கொண்ட வட்டார வளர்ச்சி அதிகாரி மணிவாசகம், குற்றப்பிரிவு போலீஸ் துணை கண்காணிப்பாளர் அழகுதுரை ஆகியோரை அழைத்து இது போன்ற சட்ட விழிப்புணர்வு முகாம்களில் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கலந்து கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்று (நேற்று) நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. வரும் காலங்களில் நடைபெறும் முகாம்களில் கண்டிப்பாக கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொள்ளவில்லையெனில் உயர்நீதி மன்றத்திற்கு உரிய வகையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதனை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் தெரிவித்து விடுங்கள் என்றார்.

நீதிபதிகள்

தொடர்ந்து முகாமில் தலைமை குற்றவியல் நீதிபதி சஞ்சீவி பாஸ்கர், உரிமையியல் நீதிபதி மகேந்திரவர்மா, மகிளா நீதிமன்ற நீதிபதி மோகனப்பிரியா, நீதித்துறை நடுவர் கருப்பசாமி, சீனியர் வக்கீல் வெள்ளைசாமி ஆகியோர் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்து கூறினர். முகாமில் தாசில்தார்கள் பாரதிவளவன், முத்துக்குமரன், அரசுதுறை அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் வினோதா வரவேற்று பேசினார். முடிவில் வட்டார வளர்ச்சி அதிகாரி மணிவாசகம் நன்றி கூறினார்.


Next Story