ஹைட்ரோ கார்பன் திட்ட தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்- கே.பாலகிருஷ்ணன்
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
புவனகிரி,
ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சிதம்பரத்தில் நடந்த விவசாயிகள் சங்க கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், டெல்டா மாவட்டங்களை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வருகிற ஏப்ரல் 5-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை நடத்துவது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் தான் நமக்கு வேண்டும். காவிரி மேலாண்மைக்குழு அமைப்பது என்பது ஏமாற்றுவேலை. தமிழ்நாட்டை விட கர்நாடகத்தில் தான் மோடிக்கு அரசியல் ஆதாயம் உள்ளது. எதிர்காலத்தில் தமிழகத்தை பாலைவனமாக மாற்ற துடிக்கிறார் மோடி. எனவே நாம் அனைவரும் வீடு, வீடாக சென்று மேற்கண்ட திட்டங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடற்கரை வளங்களை கொள்ளையடிக்கவே இந்த திட்டத்தை அறிவித்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்கள் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முழுஆதரவு அளிக்கும். விரைவில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டங்களை நடத்தும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கோரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற இருக்கும் தொடர் ரெயில் மறியல் போராட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்த போராட்டத்தை வெற்றி பெற செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், சிதம்பரம் நகர செயலாளர் பாரதிமோகன் மற்றும் விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, சி.ஐ.டி.யு., மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், மாணவர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story