காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் இல்லை தேவேகவுடா பேட்டி


காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் இல்லை தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 27 March 2018 9:30 PM GMT (Updated: 27 March 2018 9:27 PM GMT)

காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் இல்லை என்று தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு,

காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் இல்லை என்று தேவேகவுடா கூறினார்.

தேவேகவுடா உறுதி

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவை பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் சுதந்திர போராட்ட தியாகி துரைசாமி தலைமையில் அரசியல் சாசன பாதுகாப்புக்காக கர்நாடகம் அமைப்பினர் நேற்று சந்தித்து பேசினர். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை தடுக்க காங்கிரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றி பாதிக்கப்படுவது குறித்து தொகுதிகளின் பட்டியல் கொடுத்தால் அதுபற்றி பரிசீலிப்பதாக தேவேகவுடா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பின் தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தற்போது நேரம் இல்லை

நாங்கள் ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். அதனால் காங்கிரஸ் உள்பட இதர கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச தற்போது நேரம் இல்லை. காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு இல்லை. முழு பெரும்பான்மையை பெற்று எங்கள் கட்சி ஆட்சியை அமைக்கும்.

நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்க உள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை. கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 15-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை. அதே மாதம் 18-ந் தேதி எனது பிறந்த நாள். தேர்தல் வெற்றியுடன் நான் பிறந்தநாளை கொண்டாடுவேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

தொகுதிகளின் பட்டியல்

அரசியல் சாசன பாதுகாப்புக்காக கர்நாடகம் அமைப்பினர் கூறுகையில், “பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரசுடன் இணைந்து செயல்படுமாறு நாங்கள் தேவேகவுடாவிடம் கூறினோம். அவர் பரிசீலிப்பதாக கூறினார். காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளின் பட்டியலை வழங்குமாறு கூறினார்“ என்றனர்.

Next Story