அம்மாபேட்டை அருகே பரபரப்பு வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் கூட்டுறவு அதிகாரியை உறுப்பினர்கள் முற்றுகை


அம்மாபேட்டை அருகே பரபரப்பு வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் கூட்டுறவு அதிகாரியை உறுப்பினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 March 2018 5:46 AM IST (Updated: 28 March 2018 5:46 AM IST)
t-max-icont-min-icon

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் கூட்டுறவு அதிகாரியை உறுப்பினர்கள் முற்றுகையிட்டதுடன் வாக்காளர் பட்டியலையும் தீயிட்டு கொளுத்தினர்.

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் கூட்டுறவு அதிகாரியை உறுப்பினர்கள் முற்றுகையிட்டதுடன் வாக்காளர் பட்டியலையும் தீயிட்டு கொளுத்தினர். மேலும் அந்தியூர் அருகே உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சியில் முகாசிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் 1017 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தில் 11 இயக்குனர் பதவிகள் உள்ளன. இந்த பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது.

இதற்காக அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நேற்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரியும், கூட்டுறவு சார்பதிவாளருமான ஜான்டேவிட் வேட்புமனுக்களை பரிசீலனை செய்தார். அப்போது 11 பேரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதம் உள்ள 39 பேரின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த தகவல் கூட்டுறவு சங்க அறிவிப்பு பலகையில் மாலை 4 மணிக்கு ஒட்டப்பட்டது.

இதுபற்றிய தகவல் உறுப்பினர்களிடையே பரவியது. வேட்புமனு நிராகரிக்கப் பட்டவர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் அங்கிருந்த கூட்டுறவு சார்பதிவாளர் ஜான்டேவிட்டை முற்றுகையிட்டதுடன், ‘ஒரு கட்சிக்கு சார்பாக செயல்பட்டதாக’ கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது போலீசார் கூறுகையில், ‘இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த சங்க உறுப்பினர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் 2 ஆயிரத்து 452 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்குள்ள 11 இயக்குனர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரியும், பவானி கூடல் கூட்டுறவு நகரவங்கி கூட்டுறவு சார்பதிவாளருமான மாணிக்கசுந்தரம், பரிசீலனை செய்தார். மாலை 6 மணி அளவில் 11 பேர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சங்க அறிவிப்பு பலகையில் நோட்டீசை ஒட்டி விட்டு அதிகாரிகள் சென்றுவிட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு சங்க அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அலுவலகம் பூட்டிக் கிடந்ததால் அவர்கள் அனைவரும் 6.30 மணி அளவில் அலுவலகம் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர்- சென்னம்பட்டி ரோட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் உறுப்பினர்கள் கூறுகையில், ‘நியாயமான முறையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறவில்லை. மேலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தையும் எங்களிடம் கூறவில்லை,’ என்றனர். இதற்கு போலீசார் பதில் அளிக்கையில், ‘அலுவலகம் பூட்டி கிடக்கிறது. எந்த அதிகாரியையும் தற்போது தொடர்பு கொள்ள முடியாது. எனவே உங்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்,’ என்று தெரிவித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த உறுப்பினர்கள் இரவு 7.30 மணி அளவில் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story