இன்ஸ்பெக்டர் உதைத்ததில் உஷா பலியான சம்பவம்: கணவர் ராஜாவிடம் மனித உரிமை ஆணைய விசாரணை


இன்ஸ்பெக்டர் உதைத்ததில் உஷா பலியான சம்பவம்: கணவர் ராஜாவிடம் மனித உரிமை ஆணைய விசாரணை
x
தினத்தந்தி 29 March 2018 4:30 AM IST (Updated: 29 March 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்பெக்டர் உதைத்ததில் பலியான உஷாவின் கணவர் ராஜாவிடம் மனித உரிமை ஆணைய துணை போலீஸ் சூப்பிரண்டு என்.பாலகிருஷ்ண பிரபு விசாரணை நடத்தினார்.

திருச்சி,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா என்கிற தர்மராஜா (வயது34). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உஷா (30). இருவரும் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடி அருகே ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் எட்டி உதைத்ததில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து உஷா பலியானார். இதைத்தொடர்ந்து பாய்லர் ஆலை போலீசார் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து மாநில மனித உரிமை ஆணைய விசாரணை பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு என்.பாலகிருஷ்ணபிரபு நேற்று முன்தினம் திருச்சி சுற்றுலா மாளிகையில் தங்கி உஷா பலியான வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி உள்பட 7 பேரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

நேற்று 2-வது நாளாக உஷாவின் கணவர் ராஜாவிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு என்.பாலகிருஷ்ணபிரபு விசாரணை நடத்தினார். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

அதன் பிறகு வெளியில் வந்த ராஜா நிருபர்களிடம் கூறும் போது “விசாரணைக்கு ஆஜராக கோரி எனக்கு போனில் தகவல் தெரிவித்தனர். அதன் படி விசாரணைக்கு வந்தேன். என் மனைவி பலியான சம்பவம் குறித்து எடுத்துக்கூறி உள்ளேன். இந்த வழக்கில் போலீசார், இன்ஸ்பெக்டர் காமராஜை காப்பாற்ற பார்க்கின்றனர். மனைவியை இழந்து நிற்கிறேன். மனித உரிமை ஆணைய விசாரணையில் எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். நீதி கிடைக்க போராடிக்கொண்டு இருக்கிறேன். அரசு அறிவித்த நிதி மற்றும், நடிகர் கமல்ஹாசன் அறிவித்த நிதி ஆகியவை இன்னும் கிடைக்கவில்லை“ என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து ராஜாவின் வக்கீல் ஆதிநாராயணமூர்த்தி கூறும் போது “பலியான உஷா கர்ப்பம் இல்லை என்று போலீசார் குறிப்பிட்டு உள்ளனர். பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை. அதில் கர்ப்பம் இல்லை என்று தெரிவித்தால், உஷாவின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்வோம்“ என்று கூறினார்.

Next Story