அறிவுத்திறன், தேடலுக்கு புகழ்பெற்றது தஞ்சை மாவட்டம் தமிழக கவர்னர் பேச்சு


அறிவுத்திறன், தேடலுக்கு புகழ்பெற்றது தஞ்சை மாவட்டம் தமிழக கவர்னர் பேச்சு
x
தினத்தந்தி 29 March 2018 4:30 AM IST (Updated: 29 March 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

அறிவுத்திறன், அறிவுத்தேடலுக்கு புகழ்பெற்றது தஞ்சை மாவட்டம் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரத்தில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் முப்பரிமாண தொழில்நுட்ப வணிக காப்பகம் தொடக்கவிழா மற்றும் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பேசிய தாவது:-

மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் சிற்ப புதையல் மட்டுமல்ல கட்டிட கலைகளின் சாதனை உச்சம். அதனால் தான் தென்கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்த கட்டிட கலை, எழில்கலை நிபுணர்கள் திறன்படைத்தவர்கள் என்பதை பறைசாற்றுகிறது. இசை மையமாக தஞ்சை விளங்கியது. திருவையாறில் தியாகராஜர் சுவாமிகள் வாழ்ந்த இடம் உள்ளது. மன்னர் சரபோஜி அரிதான ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்துள்ளார். இவை எல்லாம் தஞ்சை மாவட்டம் அறிவு தேடலுக்கும், அறிவு திறனுக்கும் புகழ் பெற்று விளங்க காரணமாகும்.

சண்முகா பொறியியல் கல்லூரியாக 1984-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது இன்றைக்கு சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகமாக உயர்ந்துள்ளது பாராட்டத்தக்கது. அறிவியல், பொறியியல், சட்டம், கலை, மேலாண்மை போன்றவற்றில் முனைவர் பட்டம் வரை இப்பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை உதவியுடன் உயர் தொழில்நுட்ப அறிவியல் மையங்களும் நிறுவப்பட்டுள்ளது. தற்போது தொழில்நுட்ப வணிக காப்பகம் தொடங்கப்பட்டு இருப்பது இப்பல்கலைக்கழகத்தின் சாதனை பட்டியலில் மைல்கல்.

இதுபோன்றவை சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வளாக நேர்காணலில் உதவியாக இருப்பதுடன் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும். மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை உதவியுடன் ரூ.15 கோடியில் அமைக்கப்பட்டுள்ள முப்பரிமாண அச்சுத் தொழில் காப்பகம் மூலம் புதிய தொழிலகங்களை வளர்க்க முடியும். சில ஆண்டுகளாக முப்பரிமாண அச்சு தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த முப்பரிமாண அச்சு மூலம் எளிமையானது முதல் சிக்கலான வடிவங்கள் வரை உற்பத்தி செய்ய முடியும்.

2021-ம் ஆண்டில் முப்பரிமாண அச்சு சந்தையின் மதிப்பு ரூ.10.8 பில்லியன் டாலராக இருக்கும். மருத்துவம், கட்டிடக்கலை, தொழில், ராணுவம், விமானம், தானியங்கி, விண்வெளி போன்ற துறைகளில் முப்பரிமாண அச்சு முதன்மையாக பயன்படுகிறது. அறிவியல் தொழில்நுட்பங்களை எதிர்விளைவுகள் எதுவும் ஏற்படாத வகையில் பயன்படுத்த வேண்டும். அறிவியல் தொழில்நுட்பம் செல்லும் பாதையை தீர்மானிப்பதில் பொறியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அந்த பாதை நீடித்த வளர்ச்சியை தரும் பாதையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் சிறந்த மாணவர்கள் 1,246 பேருக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகையை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். விழாவில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் சேதுராமன், சென்டாப் இயக்குனர் சுவாமிநாதன், முப்பரிமாண அச்சு தொழில் காப்பக முதன்மை செயல் அலுவலர் ஸ்ரீதரன், கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கவர்னர் பேச தொடங்கியதும் மதிய வணக்கம், எப்படி இருக்கீங்க, சவுக்கியமா என்றும், முடிவில் நன்றி வணக்கம் என்றும் தமிழில் பேசினார். அவர் தமிழில் பேசியதும் அனைவரும் கரவொலி எழுப்பினர்.

முன்னதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கலெக்டர் அண்ணாதுரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Next Story