ஊட்டி மலை ரெயில் பாதை கூகுள் வரைபடத்தில் இடம் பெறுகிறது


ஊட்டி மலை ரெயில் பாதை கூகுள் வரைபடத்தில் இடம் பெறுகிறது
x
தினத்தந்தி 29 March 2018 4:00 AM IST (Updated: 29 March 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி மலை ரெயில் பாதை கூகுள் வரைபடத்தில் இடம் பெறுகிறது. இதையொட்டி சிறப்பு ரெயிலில் வந்த அதிகாரிகள் சுழலும் கேமராவுடன் மலை ரெயில் பாதையை படம் பிடித்தனர்.

குன்னூர்,

ஊட்டி என்றாலே மலை பாதையில் ஓடும் அழகிய மலை ரெயிலும், தாவரவியல் பூங்காவும் தான் நினைவுக்கு வரும். ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் மலை ரெயிலில் பயணம் செய்ய வெகுவாக விரும்புவார்கள். நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரெயில் பாதை மேட்டுப்பாளையத்தில் தொடங்கி ஊட்டியில் முடிவடைகிறது. இந்த ரெயில் பாதையில் கல்லார், ஹில்குரோவ், ரன்னிமேடு, குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல், ஊட்டி ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன. மலைப்பாதை தொடங்கும் இடமான கல்லார் முதல் குன்னூர் வரை ரெயிலின் பாதுகாப்பு கருதி பல் சக்கர தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட மலை ரெயில் பாரம்பரிய அந்தஸ்து பெற்று யுனெஸ்கோவில் இடம் பெற்றுள்ளது. புகழ்பெற்ற இந்த மலை ரெயில் பாதை கூகுள் வரைபடத்தில் இடம் பெற கூகுள் நிறுவனம் முடிவு செய்தது.

இதை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தை சேர்ந்த 3 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று மேட்டுப்பாளையத்திலிருந்து சிறப்பு ரெயிலில் ஊட்டிக்கு புறப்பட்டனர். இந்த சிறப்பு ரெயிலில் 3 பெட்டிகள் இருந்தன. இதில் ஒரு பெட்டியில் நான்கு புறங்களிலும் படம் எடுக்க வசதியாக சுழலும் கேமரா அமைக்கப்பட்டு இருந்தன. நிறுவன அதிகாரிகள் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையுள்ள மலை ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்களை வரைபடத்திற்காக குறிப்பு எடுத்துக் கொண்டனர்.

ரன்னிமேடு ரெயில் நிலையத்தையும், மலை பாதையில் ரெயில் செல்லும் இடத்தையும் அதிகாரிகள் குறிப்பும், சுழலும் கேமராவிலும் படமும் எடுத்து கொண்டனர். விரைவில் கூகுள் வரைபடத்தில் மலை ரெயில் பாதை, அதன் ரெயில் நிலையங்கள் இடம் பெறும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story