தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தி.மு.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டம்


தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தி.மு.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 29 March 2018 4:30 AM IST (Updated: 29 March 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

தக்கோலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தி.மு.க., காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலுக்காக கடந்த 26-ந் தேதி 64 பேர் மனுதாக்கல் செய்து இருந்தனர். நேற்று முன்தினம் தேர்தல் அதிகாரி 53 மனுக்களை நிராகரித்து விட்டு 11 மனுக்கள் தகுதி பெற்றதாக அறிவித்து வங்கி தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.

மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் தக்கோலம் பேரூராட்சி தி.மு.க. செயலாளர் எஸ்.நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக அரக்கோணம் நகர செயலாளர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர் துளசிராமன், பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் மகேந்திரன் மற்றும் பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வங்கிக்கு சென்று மனு நிராகரிக்கப்பட்டது குறித்து வங்கி அலுவலர்களிடம் கேட்டனர்.

அப்போது அலுவலர்கள், ‘வங்கி செயலாளர் விஸ்வநாதன், தேர்தல் அலுவலர் மணி ஆகியோர் தற்போது வங்கிக்கு வரவில்லை. மனு நிராகரிக்கப்பட்டது குறித்த விவரம் அவர்களுக்குதான் தெரியும். நீங்கள் எதுவாக இருந்தாலும் அவர்கள் வந்தவுடன் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வங்கி வளாகத்தில் அமர்ந்து திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வங்கி செயலாளர், தேர்தல் அலுவலர் உடனடியாக வந்து மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். மேலும் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று கோஷங் களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
1 More update

Next Story