வனப்பகுதியில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணை யானை தூக்கி வீசிக்கொன்றது


வனப்பகுதியில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணை யானை தூக்கி வீசிக்கொன்றது
x
தினத்தந்தி 29 March 2018 4:00 AM IST (Updated: 29 March 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே ரோட்டில் நடந்து சென்ற இளம்பெண்ணை யானை தூக்கி வீசி கொன்றது. இதில் கணவர், 2 குழந்தைகள் உயிர் தப்பினர்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள மலைக்கிராமம் குரும்பன்தொட்டி. இந்த மலைக்கிராமம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சரகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா (வயது 32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராஜம்மாள் (26). இவர்களுக்கு அபி (7), சிந்து (5) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை சிவண்ணா, ராஜம்மாள், அபி, சிந்து ஆகியோர் கோட்டமாளத்தில் உள்ள ராஜம்மாளின் தாய் வீட்டுக்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர். இவர்கள் அடர்ந்த வனப்பகுதி சாலையில் நடந்து சென்றபோது அங்கு புதர் மறைவில் யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த யானையை இவர்கள் கவனிக்கவில்லை.

அப்போது அந்த யானை திடீரென்று பிளிறியபடி அவர்களை நோக்கி ஓடி வந்தது. யானையை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதில் சிவண்ணா, அபி, சிந்து ஆகியோர் வேகமாக ஓடி அருகில் உள்ள புதர் மறைவில் மறைந்து கொண்டனர். ஆனால் ராஜம்மாளால் வேகமாக ஓடமுடியவில்லை. இதனால் அவரை யானை துரத்தி சென்று துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் யானை சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டது.

வேகமாக ஓடி புதர்மறைவில் நின்று கொண்டதால் சிவண்ணாவும், 2 குழந்தைகளும் உயிர்தப்பினர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்த ராஜம்மாளின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. 

Next Story