மாவட்டத்தில் 4 இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


மாவட்டத்தில் 4 இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 March 2018 10:30 PM GMT (Updated: 28 March 2018 10:02 PM GMT)

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெறும் முறைகேட்டை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருக்கோவிலூர்,

தமிழகம் முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைபெறும் முறைகேட்டை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் பேரியக்கம் சார்பில் அந்த அந்த பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து இருந்தார். அதன்படி திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் சிவஜோதி தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர்கள் தங்க.ஜோதி, முன்னாள் எம்.எல்.ஏ. காசாம்புபூமாலை, மாநில துணைத்தலைவர் மணிகண்டன், மாவட்ட தலைவர் வெங்கடாஜலம், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் தொகுதி அமைப்பு செயலாளர் வக்கீல் சுவிஜி.சரவணக்குமார் வரவேற்றார்.

உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, மாவட்ட பா.ம.க. செயலாளர் பால.சக்தி, துணை செயலாளர் டெல்லிசேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் சக்திவேல், செயற்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், புண்ணியமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் சுப்பிரமணி, ராயர், மூர்த்தி, வீரப்பன், ஞானவேல், சுப்புராஜ், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் சுடரொளிசுந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் திருக்கோவிலூர் நகர செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

இதேபோல் விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்காததை கண்டித்தும், விவசாய விளைபொருட்களுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யக்கோரியும், பொருட்களுக்கு எடைபோடும் போது விதிகளுக்கு புறம்பாக பணம் கேட்பதை கண்டித்தும் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் தன்ராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, மாநில செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் மாநில துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, மாநில துணைத்தலைவர் ஹரிகரன், மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில அமைப்பு செயலாளர் பழனிவேல், வன்னியர் சங்க மாநில இளைஞரணி துணை செயலாளர் தன்ராஜ், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, மாவட்ட பொருளாளர் பானுப்பிரியா செந்தில்குமார், அமைப்பு தலைவர் ராஜா, விழுப்புரம் தொகுதி அமைப்பு செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளை பொருட்களை மிக குறைந்த விலைக்கு வாங்குவதை கண்டித்தும், விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் தரக்கோரியும், எடை போடும் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணம் கேட்பதை கண்டித்து பா.ம.க.சார்பில் கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் காசாம்பு பூமாலை, முன்னாள் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ராமு, மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் வடிவேல், முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

உளுந்தூர்பேட்டையில் பா.ம.க.சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் தங்க ஜோதி, மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெகன், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், தமிழ்ஞானம், பாண்டியன், ஏழுமலை, முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டு உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெறும் முறைகேட்டை கண்டித்து கோஷம் எழுப்பினர். 

Next Story