செந்துறை அருகே கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டி ஆர்ப்பாட்டம்


செந்துறை அருகே கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 March 2018 4:15 AM IST (Updated: 30 March 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் பாரதியார் நெசவாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்திற்கு இயக்குனர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் அதிகாரியாக வாரியங்காவல் செங்குந்தர் கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர் பாலசுந்தரம் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 26-ந்தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 21 பேர் மனுதாக்கல் செய்தனர். மனு தாக்கல் முடிந்து மாலையில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரங்களை விளம்பர பலகையில் ஒட்ட வேண்டும். 7 இயக்குனர் பதவிக்காக 21 பேர் மனுதாக்கல் செய்து இருந்த நிலையில், தேர்தல் அதிகாரி வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் தேனீர் விடுதி சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் நேற்று வேட்பாளர்கள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி தலைமையில், கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த கூட்டுறவு சங்க ஊழியர்கள் செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த செந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அலுவலகத்தை திறந்து விட்டனர்.

அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலுவலகத்திற்குள் சென்று மாலை வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கேட்டு கொண்டார். அப்போது போராட்டகாரர்கள் தேர்தல் அதிகாரி மனுவை பெற்று கொண்டு கடந்த 3 நாட்களாக தலைமறைவாகி விட்டார். ஆகையால் அவரை வர வழைத்து தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இந்நிலையில் போராட்டகாரர்கள் 31-ந்தேதி (சனிக்கிழமை) தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும். இல்லை என்றால் உண்ணாவிரதம் இருப்போம் என்று கூறி கலைந்து சென்றனர். 

Next Story