மதுரையில் 120 ஏழை ஜோடிகளுக்கு இன்று திருமணம்


மதுரையில் 120 ஏழை ஜோடிகளுக்கு இன்று திருமணம்
x
தினத்தந்தி 30 March 2018 4:58 AM IST (Updated: 30 March 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் 120 ஏழை ஜோடிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் திருமணத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைக்கின்றனர்.

மதுரை,

ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி மாநில ஜெயலலிதா பேரவை சார்பில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் முத்தாய்ப்பாக 70 விதமான சீர்வரிசையுடன் 120 ஏழை, எளிய ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமண விழாவை நடத்த பேரவை செயலாளர் ஆர்.பி. உதயகுமார் முடிவு செய்தார். அதன்படி மதுரை பாண்டிகோவில் அருகே அம்மா திடலில் 120 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தன.

திருமணத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று (வெள்ளிக் கிழமை) நடத்தி வைக்க உள்ளனர். இதில் மணமகனுக்கு தங்க மோதிரம், மணமகளுக்கு தங்க காசு வழங்குகிறார்கள். 120 ஜோடி மணமக்கள் ஒரே மேடையில் அமரும் வண்ணம் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. திருமண ஜோடிகளுக்கு திருமாங்கல்யம், வெள்ளி குங்குமசிமிழ், பட்டு ஆடைகள், வெங்கல குத்து விளக்கு, கட்டில், பீரோ உள்ளிட்ட 70 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

இன்று நடைபெறும் 120 ஜோடி திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு இன்று காலை வருகிறார். அவரை விமான நிலையத்தில் இருந்து திருமண திடல் வரை அமைச்சர் உதயகுமார் தலைமையில் 50 ஆயிரம் பேரவை தொண்டர்கள் சீருடை அணிந்து வரவேற்க உள்ளனர். மேலும் 200 இடங்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

பின்னர் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் காலை 9.30 மணிக்கு மேல் திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். மேலும் திருமண விழாவில் நடைபெறும் பட்டிமன்றத்தை கழக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி தொடங்கி வைக்கிறார். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருமண விழா நடைபெறும் இடத்தையும், பந்தலையும் நேற்று நேரில் பார்வையிட்டார். விழா ஏற்பாடுகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் மணமக்கள் பற்றிய விவரங்களையும், அவர்களுக்கு வழங்கப்படும் 70 வகையான சீர்வரிசைகளையும் பார்வையிட்டார். மேலும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பாஸ்கரன், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் விழா நடைபெறும் பகுதியை வந்து பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம், சரவணன், பெரியபுள்ளான், ஏ.கே.போஸ், புறநகர் மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், மதுரை புறநகர் மாவட்ட பேரவைச் செயலாளர் தமிழரசன், மதுரை மாநகர் மாவட்ட பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், நிர்வாகிகள் சாலைமுத்து, வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், கருணா உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Next Story