காட்டு யானை உயிரிழந்ததால் நடவடிக்கை: பொக்காபுரத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட விடுதிக்கு ‘சீல்’


காட்டு யானை உயிரிழந்ததால் நடவடிக்கை: பொக்காபுரத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட விடுதிக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 31 March 2018 4:00 AM IST (Updated: 31 March 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

காட்டு யானை உயிரிழந்ததால் பொக்காபுரத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

ஊட்டி,

ஊட்டி அருகே சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொக்காபுரம் தனியார் தங்கும் விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் கடந்த 23-ந் தேதி ஒரு காட்டு யானை விழுந்து இறந்தது. இது தொடர்பாக சிங்காரா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் காட்டு யானை இறப்புக்கு காரணமான தனியார் தங்கும் விடுதி ஒப்பந்ததாரர் மஞ்சுநாத் (வயது 35) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் விடுதி உரிமையாளர் நாசர் அலி உள்பட சிலரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் காட்டு யானை இறந்தது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் தங்கும் விடுதி கட்டிடத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜகோபால், சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.

அப்போது தனியார் வன பாதுகாப்பு மற்றும் மலைப்பகுதி பாதுகாப்பு சட்டம், பஞ்சாயத்து கட்டிட சட்டம் உள்பட பல்வேறு சட்ட விதிமுறைகளை மீறி விடுதி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜகோபால் மேற்பார்வையில் செயல் அலுவலர் நந்தகுமார் தலைமையிலான பேரூராட்சி அலுவலர்கள் நேற்று தனியார் விடுதி கட்டிடத்தை போலீஸ் பாதுகாப்புடன் பூட்டி சீல் வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, இதேபோல் விதிமுறைகளை மீறி விடுதிகள் கட்டப்பட்டுள்ளதா? என விரைவில் ஆய்வு நடத்தப்படும். இதில் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தனர். 

Next Story