அரசு ஆஸ்பத்திரியில் நவீன தொலைத்தொடர்பு மருத்துவ சேவை விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்


அரசு ஆஸ்பத்திரியில் நவீன தொலைத்தொடர்பு மருத்துவ சேவை விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 April 2018 4:15 AM IST (Updated: 1 April 2018 12:11 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன தொலைத்தொடர்பு மருத்துவ சேவையை விஜயகுமார் எம்.பி. நேற்று தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கி வருவதோடு நவீன மயமாக்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் மருத்துவக்கல்லூரியில் செயற்கைக்கோள் உதவியுடன் நவீன தொலைத்தொடர்பு மருத்துவ சேவையை உருவாக்க விஜயகுமார் எம்.பி. நடவடிக்கை மேற்கொண்டார். அதற்காக பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.20 லட்சமும் ஒதுக்கினார்.

இதனைத் தொடர்ந்து இதற்கான பணிகள் தீவிரமாக நடந்தன. இந்த பணிகள் தற்போது முடிவடைந்ததைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு மருத்துவ சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில், விஜயகுமார் எம்.பி. கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன தொலைத்தொடர்பு மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார்.  

மேலும், ஆஸ்பத்திரியில் உள்ள டயாலிசிஸ் பிரிவில் கூடுதலாக 5 டயாலிசிஸ் எந்திரங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததோடு விரிவாக்கம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை பிரிவையும் விஜயகுமார் எம்.பி. திறந்து வைத்தார். ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கண் சிகிச்சை மையத்தையும் அவர் பார்வையிட்டார்.

அதன்பிறகு விஜயகுமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

உலக தரம் வாய்ந்த நவீன தொலைத்தொடர்பு மருத்துவ சேவை தமிழ்நாட்டில் முதல் முறையாக குமரி மாவட்டத்தில் தான் தொடங்கப்பட்டு இருக்கிறது. தொலைத்தொடர்பு மருத்துவ சேவை செயல்படுத்துவதன் மூலம் மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் டாக்டர்கள் நாட்டில் உள்ள முதன்மையான மருத்துவம் சம்பந்தமான பரிணாம வளர்ச்சிகளை செயற்கைக்கோள் மூலம் தொலை தூரத்தில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை பெற முடியும். இதனால் டாக்டர்களிடையே கருத்து பரிமாற்றம் எளிதில் நடைபெற வசதியும், வாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் குமரி மாவட்ட மக்கள் உலக தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை பெற முடியும்.

ஆஸ்பத்திரியில் உள்ள டயாலிசிஸ் பிரிவில் குறைவான நோயாளிகளுக்கு மட்டுமே டயாலிசிஸ் செய்யும் முறை இருந்தது. நான் எம்.பி.யாக பதவி ஏற்ற பின்னர் புதிதாக 9 டயாலிசிஸ் எந்திரங்கள் வாங்க ஏற்பாடு செய்தேன். இந்த நிலையில் தற்போது கூடுதலாக 5 டயாலிசிஸ் எந்திரங்கள் வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 40 பேருக்கு டயாலிசிஸ் செய்ய முடிகிறது. இதற்கு முன் நெல்லை மாவட்டத்துக்கு சென்று பணம் கொடுத்து டயாலிசிஸ் செய்து கொண்டவர்கள் தற்போது ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாக டயாலிசிஸ் செய்து கொள்கிறார்கள். ஆஸ்பத்திரியில் நோயாளிகளை ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவுக்கு அழைத்துச் செல்வதில் சிரமங்கள் உள்ளன. அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் கண் சிகிச்சை மையம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் இன்னும் 2 மாதங்களில் நிறைவு பெற்றுவிடும். அதற்கு பின் நவீன எந்திரங்களை பொருத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் செல்வராஜ், மருத்துவ கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானசேகர், நகர செயலாளர் சந்திரன், வக்கீல் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story