காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் நாளை ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் நாளை ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 April 2018 3:45 AM IST (Updated: 1 April 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன்சேரல், மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீண்ட காலமாக நீடித்துவரும் காவிரி நீர் பிரச்சினையால் தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர். சோழநாடு சோறுடைத்து என்ற பழமொழி மறைந்து சோழநாட்டினர் சோத்துக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கும், எலிக்கறியை தேடி உண்ணும் அவல நிலைக்கும் ஆளாகியுள்ளனர். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பில் காவிரி நீர் பிரச்சினைகளுக்காக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. நடுவர் மன்ற தீர்ப்பும் அமல் படுத்தப்படாத சூழ்நிலையில் உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான இறுதி தீர்ப்பை வழங்கியது. நதிநீர் என்பது எந்த மாநிலத்துக்கும் சொந்தமானது அல்ல. அது தேசத்தின் சொத்து என்று வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பை வழங்கியதோடு, 6 வார காலத்திற்குள் காவிரி நீர் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த கண்காணிப்பு ஆணையம் அமைக்க உத்தரவிட்டது.

ஆர்ப்பாட்டம்

ஆனால் அந்த காலக்கெடு கடந்த 29-ந்தேதி நிறைவடைந்துவிட்ட நிலையில், மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது ஆகும். தீர்ப்பில் உண்மையில் ஏதேனும் தெளிவு தேவையென்றால் அதுகுறித்து காலக்கெடு முடிவதற்கு முன்பே உரிய தெளிவு பெற்றிட வழிவகையிருந்தும், மத்திய அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்துள்ளது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, காவிரி நீர் பெற்றுதராத மத்திய அரசை கண்டித்தும், உடனே காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நாகை மாவட்ட மையம் சார்பில் நாளை (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணிக்கு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களும், பல்வேறு அமைப்பினரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story