பள்ளி மாணவ-மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயில்வதற்கு 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


பள்ளி மாணவ-மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயில்வதற்கு 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 1 April 2018 3:45 AM IST (Updated: 1 April 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயில்வதற்கு வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்ரமணியராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் மாணவர்களுக்கு மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களிலும், மாணவிகளுக்கு ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு வருகிற மே (மாதம்) 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஆக்கி, நீச்சல், டேக்வோண்டோ, கைப்பந்து, பளுதூக்குதல், கபடி, மேஜைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளுக்கும், மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, ஆக்கி, நீச்சல், டேக்வோண்டோ, பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எனவே விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ-மாணவிகள் அதற்கான உரிய படிவங்களை மார்ச் 26-ந் தேதி முதல் அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை அணுகி இலவசமாக பெற்று வருகின்றனர். மேலும் 2018-2019-ம் வருட சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்திடவும், விளையாட்டு விடுதி சார்பான விவரங்களை www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 20-ந்தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story