திருவள்ளூர் நகராட்சியில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர் நகராட்சியில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தினந்தோறும் இங்கு 25 டன்னுக்கு மேற்பட்ட குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. திருவள்ளூர் நகராட்சி சார்பில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக பிரித்து வழங்கவேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நகராட்சி சார்பில் 27 வார்டுகளிலும் தனித்தனியாக குப்பை தொட்டிகள் வைத்துள்ளனர்.
அந்த குப்பை தொட்டிகளில் பொதுமக்கள் தினந்தோறும் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை போட்டு வந்தனர். அவ்வாறாக பெறப்படும் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், குப்பைகள் என மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை திருவள்ளூர் நகராட்சி ஊழியர்கள் வாகனத்தில் எடுத்து சென்று திருவள்ளூர் நகரின் மின்தகன மயானபூமி அருகே உள்ள ஒரு இடத்தில் கொட்டி வருகின்றனர். அந்த குப்பைகள் தற்போது மலைபோல் குவித்து வைக்கப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.
உரிய நடவடிக்கை
பலத்த காற்று வீசும்போது அந்த கழிவுகள் காற்றில் பறந்து அந்த வழியாக ஐவேலிஅகரம், ஈசந்தோப்பு, எடப்பாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இந்த குப்பைகள் ஐவேலிஅகரம் சாலையின் இருபுறமும் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதனை சிலர் தீவைத்து எரிப்பதால் அதன் மூலம் வரும் புகையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் அந்த குப்பை குவியலால் அருகில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பசுமை உரக்குடில்
இது குறித்து திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
திருவள்ளூர் நகராட்சியில் தினசரி சேரும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் மூலமாக மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தனித்தனியாக பிரித்து பெறப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம்பிரித்து அதனை தனித்தனியாக வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் போடவேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சேரும் குப்பைகள் திருவள்ளூர் மின்மயானத்தின் அருகில் உள்ள காலியிடத்தில் கொட்டப்பட்டு வருகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் திருவள்ளூரை அடுத்த நுங்கம்பாக்கம் கிராமத்தில் பசுமை உரக்குடில் ரூ.5 கோடியே 90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சியில் சேரும் மக்கும் குப்பைகளை நுங்கம்பாக்கத்தில் உள்ள பசுமை உரக்குடிலில் வைக்கப்பட்டுள்ள 30 தொட்டிகளில் எடுத்து சென்று போடப்படும்.
40 நாட்களில்
அந்த மக்கும் குப்பைகள் 40 நாட்களில் உரமாக மாற்றப்படும். பின்னர் அந்த உரமானது விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த பசுமை உரக்குடிலில் குப்பைகளை கூழாக மாற்றி தொட்டியில் போட்டால் துர்நாற்றம் வீசாது. மேலும் எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல் இயற்கைமுறையில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு தொட்டியில் 4 டன் கழிவுகளை கொட்டி உரமாக மாற்ற முடியும்.
இந்த பசுமை உரக்குடிலை விரைவில் திறந்து வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விரைவில் திருவள்ளூர் நகராட்சியில் சேரும் மக்கும் குப்பைகள் அந்த இடத்திற்கு சென்று உரமாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story