கல்லூரி மாணவர் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


கல்லூரி மாணவர் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2018 4:00 AM IST (Updated: 1 April 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்குமார். தையல் தொழிலாளி. இவரது மகன் ஜெகதீஷ் (வயது 19). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரை பேராசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜெகதீஷ் தனது சாவிற்கு கல்லூரி பேராசிரியர் ஒருவர்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஷ் உடலை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தற் கொலைக்கு காரணமான பேராசிரியரை கைது செய்ய வேண்டும் என்று கூறி ஜெகதீஷின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். அவரை கைது செய்யும் வரை ஜெகதீஷ் உடலை வாங்க மாட்டோம் என்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். துணைபோலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. 

Next Story