நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறுத்தியே தீருவோம்: மதுரையில் நடைபயணத்தை தொடங்கிய வைகோ உறுதி


நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறுத்தியே தீருவோம்: மதுரையில் நடைபயணத்தை தொடங்கிய வைகோ உறுதி
x
தினத்தந்தி 1 April 2018 5:00 AM IST (Updated: 1 April 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறுத்தியே தீருவோம் என்று மதுரையில் நடைபயணத்தை தொடங்கிய வைகோ கூறினார்.

மதுரை,

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மதுரையில் நேற்று விழிப்புணர்வு நடைபயணத்தை தொடங்கினார்.

இதன் தொடக்கவிழா மதுரை பழங்காநத்தத்தில் நடந்தது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா, கொளத்தூர் மணி, இயக்குனர் கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் வைகோ பேசியதாவது:-

மேற்குத் தொடர்ச்சி மலையை யுனஸ்கோ அமைப்பு புராதனச் சின்னமாக அறிவித்துள்ளது. இந்த மலையை காக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கை தந்துள்ளது. ஆனால் இதனையெல்லாம் புறந்தள்ளி விட்டு, மத்திய அரசு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் முல்லைப்பெரியாறு, இடுக்கி அணைகள் உடையும். மதுரை நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

இந்த திட்டத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும். நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதனை மறந்து செயல்பட வேண்டும். அண்ணன்-தம்பிகளான எங்களிடம் முன்பு பகை இருந்தாலும், இப்போது நானே செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் செயல்பட வந்துவிட்டேன். அதுபோல இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்று திரள வேண்டும்.

இதே மதுரையில் இருந்துதான் கலைஞர் நீதி கேட்டு திருச்செந்தூருக்கு நடைபயணம் தொடங்கினார். அப்போது நான் வாழ்த்திப் பேசினேன். இப்போது நான் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம் செல்கிறேன். அதில் மு.க.ஸ்டாலின் வந்து வாழ்த்துகிறார்.

நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த கடினமான பாறைகள் இருக்க வேண்டும். அதனால் தான் தேனியில் தொடங்குகிறோம் என்கிறார்கள். ஏன் மோடியின் குஜராத்திலும், மராட்டியத்திலும் கடினமான பாறைகள் இருக்கின்றனவே. அங்கு தொடங்க வேண்டியது தானே? மோடியை பொறுத்தவரை தமிழர்கள் அழிய வேண்டும். அதற்காகத் தான் நாசகார திட்டங்களை எல்லாம் தமிழகத்தில் கொண்டு வர துடிக்கிறார்.

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி தரவில்லை. ஆனால் அவர்கள் அனுமதி தந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் தான் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கிறது.

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த திட்டத்திற்கு அனுமதி தந்தால் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தமிழகத்தில் எங்கும் செல்ல முடியாது. நான் மிரட்ட வில்லை. உண்மை நிலையை சொல்கிறேன். இந்த திட்டத்தால் நமது மாநிலம் மட்டுமின்றி கேரளாவும் அழியும். 2.17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழியும். மலையில் 3 கிலோ மீட்டர் ஆழத்திற்கு தோண்டி பாறைகளை உடைத்தெறிவார்கள். பெரியாறு அணையில் இருந்து தினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் அல்ல, 12 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பார்கள். மதுரை உள்பட 5 மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்.

எனது இந்த நடைபயணம் வெற்றி பெற வேண்டும் என்று கேரள முன்னாள் முதல்-அமைச்சர் உம்மன்சாண்டி போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். கம்பத்தில் நடைபெறும் நிறைவு விழாவில் பங்கேற்பதாக கேரள காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.

இந்த பேரணி தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அச்சுதானந்தனை நேரில் சென்று அழைத்தேன். அப்போது அவர் மேலிடம் அனுமதி தந்தால் வருவதாக கூறினார்.

உடனே நான் சீத்தாராம் யெச்சுரியை தொடர்பு கொண்டு பேசினேன். அவர், தாராளமாக நீங்கள் அச்சுதானந்தனை அழைத்துச் செல்லுங்கள் என்றார். ஆனால் இங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், நியூட்ரினோ திட்டம் குறித்து எங்களுக்கு தவறான கருத்து எதுவும் இல்லை. அதனால் நாங்கள் இதில் பங்கேற்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் எனக்கு வெளிப்படையாக கடிதம் எழுதி விட்டார்.

மக்கள் சக்தி கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம். தடுத்து நிறுத்தியே தீருவோம். இந்த பேரணி ம.தி.மு.க. பேரணி அல்ல. எங்கள் கட்சி கொடியை ஏந்திச் செல்ல மாட்டோம். இவ்வாறு வைகோ பேசினார்.

அதன்பின் பேரணி கொடியை வைகோ மேடையில் அறிமுகம் செய்து வைத்து பேசும் போது, இந்த கொடியில் பாண்டியர்களின் மீன் சின்னம், சேர மன்னர்களின் வில்-அம்பு, சோழர்களின் புலி சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன என்றார்.

மதுரை பழங்காநத்தத்தில் நடைபயணம் தொடங்கிய வைகோ, முதலில் காளவாசல் வந்தார். அங்கு மதிய உணவுக்காக ஒரு திருமண மண்டபத்தில் தொண்டர்களுடன் தங்கினார்.

மாலை 6 மணியளவில் மீண்டும் தனது நடைபயணத்தை தொடங்கி, தோரணவாசல், விராட்டிபத்து, அச்சம்பத்து, முடக்குசாலை, நாகமலைபுதுக்கோட்டை வழியாக இரவு 9 மணியளவில் செக்கானூரணியை அடைந்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.

பின்பு செக்கானூரணி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தொண்டர்களுடன் இரவு தங்கி ஓய்வு எடுத்தார். அவருடன், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் மாரநாடு, தெற்கு மாவட்ட செயலாளர் கதிரேசன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, தொழிற்சங்க இணைப் பொதுச் செயலாளர் மகப்பூப்ஜான், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் குணா, சிவகங்கை மாவட்ட செயலாளர் செவ்வந்தியப்பன் உள்பட தொண்டர் படை, மாணவர் அணி, இளைஞர் அணி என நூற்றுக்கணக்கானவர்கள் நடைபயணத்தில் பங்கேற்கின்றனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் செக்கானூரணியில் இருந்து புறப்பட்டு, கருமாத்தூர், செல்லம்பட்டி, வாலாந்தூர் குப்பணம்பட்டி வழியாக உசிலம்பட்டியை அடைகிறார். அங்கு இரவு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். 

Next Story