விண்ணப்பங்கள் வழங்க மறுத்ததால் தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்


விண்ணப்பங்கள் வழங்க மறுத்ததால் தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2018 4:03 AM IST (Updated: 1 April 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

சின்னத்திருப்பதி கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினருக்கு விண்ணப்பங்கள் வழங்க மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் 1,153 கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள தலைவர், துணைத்தலைவர், இயக்குனர்களை(நிர்வாகக்குழு உறுப்பினர்கள்) தேர்வு செய்ய 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த சங்கங்களில் 8 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். முதல் கட்ட தேர்தலுக்கு கடந்த 26-ந் தேதி 293 கூட்டுறவு சங்கங்களுக்கு வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதில் 285 சங்கங்களுக்கு 2,889 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டியுள்ள 8 சங்கங்களுக்கு மட்டும் நாளை(திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த நிலையில் 2-ம் கட்டமாக 296 கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று நடந்தது.

இத்தேர்தல் மூலம் 2,985 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

பால் உற்பத்தியாளர் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், பனைவெல்லம் கூட்டுறவு உற்பத்தி சங்கம் உள்பட 296 சங்கங்களுக்கு 2-ம் கட்ட தேர்தல் நடக்கிறது. இவற்றில் சேலம் மாநகரில் மட்டும் சின்னத்திருப்பதி நகர கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட 52 கூட்டுறவு சங்கங்கள் தேர்தலை எதிர்கொள்கிறது. புறநகர் மாவட்டத்தில் மட்டும் 244 கூட்டுறவு சங்கங்களில் தகுதியான உறுப்பினர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திட அனுமதிக்கப்பட்டனர்.

சேலம் சின்னத்திருப்பதி நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் 11 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 1,700 உறுப்பினர்கள் தகுதியானவர்களாக உள்ளனர். அ.தி.மு.க.வினர் அங்கு தேர்தல் அதிகாரி சதாசிவத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். பா.ம.க.வினர் முன்கூட்டியே வேட்பு மனுக்களை தாக்கல் செய்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

இந்த நிலையில், சின்னத் திருப்பதி நகர கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் போட்டியிட தகுதி இருந்தும் தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்பங்களை கூட வாங்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தி.மு.க-காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆளுங்கட்சியினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கு பதற்றம் நிலவியதால் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாருடன் தி.மு.க., மற்றும் காங்கிரசார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தி.மு.க. நிர்வாகி சுந்தர்ராஜன் கூறுகையில், “பல ஆண்டுகளாக நான் உறுப்பினராக இருக்கிறேன். அதிக தொகை இந்த நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் டெபாசிட் செய்திருக்கிறேன். ஆனால், விண்ணப்பங்களை கூட வாங்க விடாமல் ஆளுங்கட்சியினரும், போலீசாரும் அராஜகம் செய்து வருகிறார்கள். ஜனநாயக முறையில் தேர்தல் நடப்பதாக தெரியவில்லை”என்றார். இதற்கிடையில், அ.தி.மு.க.வினர்-பா.ம.க.வினர் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன்படி ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் 2 இடங்கள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. இந்த புகாரை அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.

Next Story