பெண்களுக்கான வேலைவாய்ப்பு - கறவை மாடு வளர்ப்பு-4


பெண்களுக்கான வேலைவாய்ப்பு - கறவை மாடு வளர்ப்பு-4
x
தினத்தந்தி 1 April 2018 9:25 AM IST (Updated: 1 April 2018 9:25 AM IST)
t-max-icont-min-icon

இன்றைய கன்றே நாளைய பசுவாகும் என்பதால், கன்று பிறந்ததிலிருந்து பண்ணையாளர்கள் அதிக கவனம் செலுத்தி கன்றுகளை வளர்க்க வேண்டும். பிறந்த கன்றுகளின் தொப்புள் கொடியை உடனடியாக நீக்கிட வேண்டும்.

ன்றைய கன்றே நாளைய பசுவாகும் என்பதால், கன்று பிறந்ததிலிருந்து பண்ணையாளர்கள் அதிக கவனம் செலுத்தி கன்றுகளை வளர்க்க வேண்டும். பிறந்த கன்றுகளின் தொப்புள் கொடியை உடனடியாக நீக்கிட வேண்டும். மேலும் கன்றுகளுக்கு சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். பொதுவாக 3 நாட்கள் வரையில் பசுக்களிடம் சீம்பால் சுரக்கும். சீம்பாலில் சாதாரண பாலைவிட ஏழு மடங்கு புரத சத்தும், 2 மடங்கு மொத்த திடப்பொருட்களும் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் கன்றுகளுக்கு நல்லதாகும். குட்டிகள் பிறந்த 30 முதல் 45 நிமிடங்களில் அவை தானாக எழுந்து தாயிடம் பால் குடிக்க ஆரம்பிக்கும். அப்படி எழுந்திருக்கவில்லை என்றால் அவைகளுக்கு நாம் உதவிட வேண்டும். அதாவது குட்டிகள் பிறந்து 3 நாட் களுக்கு அதன் மீது தனி கவனம் செலுத்திட வேண்டும்.

கன்றுகளுக்கு தீவனம்

கன்றுகளுக்கு தாய்ப்பாலை கறந்து, கன்றுகளின் உடல் எடையை கணக்கீட்டு அதற்கு தகுந்தாற்போல் கொடுக்க வேண்டும். முதல் 3 நாட்களுக்கு பசுவின் சீம்பாலை கொஞ்சம் வெதுவெதுப்பாக்கி 8 மணி நேர இடைவெளியில் கொடுக்க வேண்டும். 2 அல்லது 3 நாட்களுக்கு பால் புட்டியின் மூலம் பாலை புகட்டலாம். பால் அருந்தும் பொழுது தலையை உயர்த்தி காம்பிலிருந்து பாலை குடிப்பது போல குடிக்கச் செய்ய வேண்டும். 3 வாரத்தில் கன்றுகள் பசும்புற்களையும், தீவன கலவையையும் உண்ணத் தொடங்கும்.

குடற்புழு நீக்கம்

கன்றுகளுக்கு முறையாக குடற்புழு நீக்க மருந்தை அளிக்க வேண்டும். அவைகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்க மருந்தை அளிப்பது நல்லது. சாணத்தை பரிசோதனை செய்து உரிய குடற்புழு நீக்க மருந்தை அளிக்கலாம். இதன் மூலம் கன்றுகள் தீவனத்தை நல்ல முறையில் தின்று துரித வளர்ச்சி, விரைவில் பருவமடைதல், உடல் எடை பெருக்கம் ஆகியவற்றை எட்டும்.

கறவை மாடு வளர்ப்புத் தொழில் தற்போது பெருமளவில் நடந்துவருகிறது. இதில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 1940-ம் ஆண்டுகளில் பால் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலையில் நம் நாடு இருந்தது. தற்போது ஏற்றுமதி செய்யும் நிலையை எட்டிவிட்டோம்.

கறவை மாடுகள் வளர்க்கும் தொழிலை சிறப்பாக செய்யவேண்டும் என்றால் நோயற்ற, ஆரோக்கியமான மாடுகளை கண்டறிந்து வாங்கி, பராமரிக்கவேண்டும். நோய் தாக்குதலுக்குள்ளான மாடுகளை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். அவை பிற மாடுகளிலிருந்து பிரிந்து சோர்வுடன் மிக அமைதியாக இருக்கும். தீவனம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளும் அளவு குறைந்து போய்விடும். அசைபோடுதல் நின்றுவிடும். கண்கள் சிவந்து, கண்களில் இருந்து நீர் வழியும். சாணம் இறுகிக் கெட்டியாகவோ அல்லது இளகிக் கழிச்சலாகவோ வெளிவரும். பால் உற்பத்தியும் திடீரென்று குறைந்து போய்விடும். தொற்று நோயாலும் மாடுகள் பாதிப்புக்குள்ளாகும். தொற்று நோய் பரவும்போது பண்ணையிலுள்ள மாடுகள் ஒரே சமயத்தில் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படும்.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்

தொற்று நோய்களை கட்டுப்படுத்த முதலில் கறவை மாடுகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். அட்டவணைபடி கறவை மாடு களுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி மருந்தை அளித்திட வேண்டும். பண்ணையில் உள்ள இளங்கன்று, நிறை சினைமாடுகள் நீங்கலாக மீதி அனைத்திற்கும் தடுப்பூசி போட வேண்டியது அவசியம். மாடு களுக்கு தண்ணீர் வழங்கும் தண்ணீர் தொட்டியை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். பாசி பிடிக்காமல் இருப்பதற்காக வாரம் ஒருமுறையாவது சுண்ணாம்பு அடிக்க வேண்டும். தண்ணீர் தொட்டியை மூடிய நிலையில் எப்போதும் பராமரிப்பது அவசியம். அவ்வப்போது சாணத்தை அகற்றி பண்ணையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சாணத்தை உரக் குழியில் கொட்டி வரலாம். பால் கறக்கும்போது மடியை நன்கு கழுவுவது முக்கியமானதாகும். கிருமி நாசினி மருந்து கொண்டும் சுத்தம் செய்வது நல்லது. அதுபோல் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே பால் கறக்க வேண்டும். பால் கறக்கும் எந்திரம் பயன்படுத்துவதாக இருந்தால் பால் கறந்து முடிந்தவுடன் எந்திரத்தின் ரப்பர் பாகம் அனைத்தையும் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். தரையில் பால் சிந்தினால் அதை உடனடியாக கழுவி விட வேண்டும்.

பண்ணையில் நோயுற்ற பசுக்களை பிரித்து, தனியாக பராமரிக்க வேண்டும். புதிதாக மாடுகளை வாங்கும்போது ரத்த பரிசோதனை உள்ளிட்ட தகுந்த உடல் பரிசோதனைகளை செய்வது நல்லது. பண்ணையில் உள்ள மாடுகள் வெளியில் சென்று மேய்வதையும், மற்ற மாடுகளோடு கலப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும். வெளி மாடுகளையும் பண்ணைக்குள் நுழையவிடக்கூடாது, மாடுகள் நோயுற்றால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

கன்றுகளுக்கான நோய் தடுப்பு முறை

கன்றுகளுக்கு முதல் நாள் சீம்பால் மட்டுமே போதுமானதாகும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 2-வது நாள் வைட்டமின் ஏ ஊசி செலுத்திட வேண்டும். இவ்வாறு செய்தால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்க முடியும். 10-வது நாள் லிவாமிசால் அல்லது பைரண்டால் குடற்புழு நீக்க மருந்தை புகட்ட வேண்டும். இதன் மூலம் பால் மூலம் பரவும் இளம் உருளை புழுக்களை நீக்கிவிடலாம். ஒருமாதத்திற்கு பிறகு பிரப்பரஸின் குடற்புழு நீக்க மருந்தை கொடுக்கவேண்டும். அதன் மூலம் வளர்ச்சியடைந்த புழுக்களை அப்புறப்படுத்திவிடலாம். கன்றுகளின் தாடை வீங்கியோ, வயிறு பெருத்தோ காணப்பட்டால் உடனே சாணத்தை பரிசோதித்து தகுந்த குடற்புழு நீக்க மருந்தை கொடுக்க வேண்டும். பேன், ஈ, உண்ணி போன்ற புற உயிரிகளை நீக்குவதற்கு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி மாடுகளின் உடல் பாகத்தில் மருந்து தெளித்தல் வேண்டும்.

அடைப்பான் நோய்:

இந்த நோய் பாதிப்புக்குள்ளான மாடுகள் திடீரென்று இறந்துவிடும். இறந்தவுடன் அதன் ஆசனவாய், நாசித்துவாரம் மற்றும் வாயிலிருந்து கருஞ் சிவப்பு ரத்தம் வெளிவரும். இந்த நோய் தாக்காமல் தடுக்க கன்றுகள் பிறந்த 6-வது மாதத்தில் தடுப்பூசி போட வேண்டும். அதன் பின்னர் ஆண்டுக்கு ஒருமுறை இதற்கான தடுப்பூசியை போட வேண்டும்.

கோமாரி நோய்

இந்த நோய் மூலம் பரவும் வைரஸ் நுண்கிருமி அதிக நாட்கள் உயிருடன் வாழும் குணம் உடையது. இந்த நோய் கிருமிகளில் 7 வகைகள் உள்ளன. இதில் 4 வகைகள் நமது நாட்டில் உள்ள மாடுகளை தாக்குகின்றன. இவைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான நோய் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய தன்மை பெற்றவை. இதற்கான தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு திறன் 4 மாதம் தான். ஆகையால் 4 மாதத்திற்கு ஒருமுறை தடுப்பூசி போட்டு வர வேண்டும். கோமாரி நோயால் அதிக உயிரிழப்பு இல்லை என்றாலும் பொருளாதார இழப்பு நிறைய உள்ளது. இந்நோய் தீவனம், நீர், காற்று மூலம் பரவுகிறது.

இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு 41 டிகிரி செல்சியஸ் காய்ச்சல் ஏற்படும். வாயில் இருந்து நுரையுடன் கெட்டியான உமிழ்நீர் வெளிவந்தவண்ணம் இருக்கும். மாடு வாயை சப்பிக்கொண்டிருக்கும். பால் மடி, காம்பு போன்றவற்றில் கொப்பளம் தோன்றும். அதன் காரணமாக புண்கள் ஏற்படும். இந்த நோய் பாதிப்புக்குள்ளான பசுக்களிடம் பால் குடிக்கும் கன்றுகள் இறந்து போகும்.

இந்த நோயில் இருந்து பாதுகாக்க கன்றுகளுக்கு 8-வது வாரத்தில் முதலாவது கோமாரி நோய் தடுப்பூசியும், 12-வது வாரத்தில் இரண்டாவது தடுப்பூசியும், 16-வது வாரத்தில் மூன்றாவது தடுப்பூசியும் போட வேண்டும். அதன் பின்னர் 4 மாதத்திற்கு ஒருமுறை கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டு வர வேண்டும்.

சோடியம் ஹைட்ராக்சைட் மற்றும் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் கிருமி நாசினி மருந்தை கரைசலாக்கி பண்ணையில் உள்ள தரைதளத்தில் தெளிக்க வேண்டும். பீளிச்சிங் பவுடரை தரையில் தூவியும் கிருமியின் எண்ணிக்கையை குறைக்கலாம். நோயுற்ற மாடுகளின் பாலை கன்றுகளை குடிக்க விடக்கூடாது. நோய்கிருமி, தொழுவத்தில் அதிக நாள் உயிருடன் இருக்கும் திறன் கொண்டவை என்பதால் கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தம் செய்யும்போது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சப்பை நோய்

இந்த நோயால் பாதிப்புக்குள்ளான மாடுகளின் இடுப்பு மற்றும் தொடைப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அவை இறந்து விடும். இந்தநோய் வாராமல் தடுக்க கன்றுகளுக்கு 5-வது மாதத்தில் தடுப்பூசி போட வேண்டும். அதன் பின்னர் ஆண்டுக்கு ஒருமுறை இந்த நோய்க்கான தடுப்பூசி அவசியம்.

தொண்டை அடைப்பான்

இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் தொண்டையின் அடிப்பகுதியில் வீக்கம் உண்டாகும். அதனால் மூச்சுவிட சிரமப்பட்டு இறந்து விடும். இதை தடுக்க கன்றுகளுக்கு 6-வது மாதத்தில் முதலாவது தடுப்பூசி போட வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசியை தொடர வேன்டும்.

காசநோய்

மாடுகளை தாக்கும் கொடிய நோய் இது. நோய் பாதிப்புக்குள்ளான மாடுகள் மிகவும் இளைத்து மெலிந்து காணப்படும். தொடர்ந்து உடல் எடை குறைந்து கொண்டே போகும். மூச்சு திணறலால் அவதிப்படும். இந்த நோய் பாதிக்கப்பட்ட மாடுகளை தனியாக அப்புறப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.

கன்று கழிச்சல்

இந்த நோய் தாக்குதலுக்குள்ளான மாடுகளுக்கு தொடர்ந்து வெள்ளை நிறத்தில் வயிற்றுப்போக்கு உண்டாகும். கன்றுகளாக இருந்தால் உடல் மெலிந்து இறந்துவிடும். இதை தடுக்க மாட்டின் மடியை நன்கு கழுவிய பின்பு கன்றுகளை பால் அருந்துவதற்கு அனுமதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கன்றுக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும்.

தைலேரியா நோய்

இந்த நோய் உண்ணிகளால் ஏற்படும். அவற்றின் வீரியத்தால் அதிக அளவு காய்ச்சல் உண்டாகும். தொடைப்பகுதியில் நெறி கட்டி காணப்படும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். உண்ணியை நீக்குவதற்கு மாட்டின் மீது மருந்து தெளிக்க வேண்டும். இதற்கான தடுப்பூசியையும் போட்டு கொள்ளலாம்.

பெபிசியா நோய்

இதுவும் உண்ணிகளால் ஏற்படும் மற்றொரு நோய். இந்த நோயால் அவதிப்படும் மாடுகளின் சிறுநீரில் ரத்தம் கலந்து காபி போன்றும் காணப்படும். அதிக காய்ச்சலும் இருக்கும். இந்த நோயை தீர்க்க, உண்ணிகளை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

பால் விற்பனை

ஆரோக்கியமான பசுக்களில் இருந்து அதிகமான அளவு பால் பெறமுடியும். பாலாகவோ அல்லது பால் பொருட்களாகவோ விற்பனை செய்யலாம். வீடு களுக்கு நேரடியாக விநியோகம் செய்ய முடியும். பெரிய அளவில் பால் உற்பத்தி செய்தால், பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கொடுத்து, பாலின் தரத்தை பொறுத்து வருவாய் ஈட்டலாம். அதற்கு சங்கத்தின் உறுப்பினராக வேண்டியது அவசியம். சங்கங்கள் இல்லாத இடங்களில் பால் கொள்முதல் செய்யும் தனியார்களிடம் விற்பனை செய்யலாம். அதிக அளவில் பால் உற்பத்தி செய்தால் விற்பனை நிலையங்களை அமைத்து பதப்படுத்திய பின் கொழுப்பு நீக்கிய பால், நிலைப்படுத்தப்பட்ட பால், அதிக கொழுப்புள்ள பால் என்று தரம்பிரித்து நுகர்வோர் தேவைக்கேற்ப விற்பனை செய்யலாம்.

பாலில் இருக்கும் கொழுப்பு பகுதியை, கொழுப்பு அல்லது பாலாடை பிரிப்பான்கள் மூலம் பிரித்தெடுக்கலாம். பின்னர் பாலாடையில் இருந்து வெண்ணெய், நெய் தயாரிக்கலாம். பிரித்தெடுத்த பாலை தயிர் மற்றும் மோர் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். இவைகளை நேரடியாக வியாபாரிகள் மூலம் விற்பனை செய்து நல்ல லாபத்தை ஈட்ட முடியும். மதிப்பூட்டிய பால் பொருட்களை பண்ணையாளர்கள் உற்பத்தி செய்தும் லாபம் சம்பாதிக்கலாம்.

அடுத்த வாரம்: கினிக் கோழி வளர்ப்பு முறை

தகவல்: பி.முரளி, உதவி பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைபயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்.

Next Story